Home நாடு பார்வை: உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு (பாகம்-2)

பார்வை: உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு (பாகம்-2)

1474
0
SHARE
Ad

(மலேசியத் தமிழ்ப் பண்பாட்டியக்கம் மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை ஆதரவுடன், கடந்த ஜூன் 8 முதல் ஜூன் 10 வரை நடத்திய முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு – 2018 குறித்த தனது பரவலான பார்வையில் புதுவைப் பல்கலைப் பேராசிரியை முனைவர் இளமதி சானகிராமன் வழங்கும் கட்டுரையின் இரண்டாம் பாகம்)

2-ஆம் நாள் அமர்வு

உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாட்டின் நிறைவாக 10.6.2018 (ஞாயிற்றுகிழமை) காலை 9.00 மணிக்குப் பொது அமர்வு துவங்கியது. அதில் மலேசியாவின் பழனி மாமா (அறிவியல் முனைவர் வி. மு. பழனியப்பன்) அவர்கள் கதைகளின்வழி குழந்தைகளை ஈர்த்து, அவர்களை நன் நெறிப்படுத்தும் வழி முறைகளை இரண்டு குழந்தைகளை வைத்து நடித்துக் காட்டினார். அவையோர் வியக்கும்படியாக அவரது நடிப்புடன் கலந்த கதை சொல்லல் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிக்கு முனைவர் குமாரவேலு இராமசாமி தலைமை தாங்கிச் சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த நிறைவு விழாவில் பாப்பா பாவலர் முனைவர் முரசு நெடுமாறன் இயற்றிய தமிழ்த் தாய் வாழ்த்துடன் மாநாட்டின் எழுச்சிப்பாடல் காணொலியுடன் ஒளிபரப்பப் பட்டது. மாநாட்டின் துணைத் தலைவர் இணைப் பேராசிரியர் முனைவர் மோகனதாஸ் ராமசாமி, விழாவிற்கு வந்து பெருமை சேர்த்த பெருமக்கள் அனைவரையும் அவரவரின் சிறப்புகளைக் கூறி வரவேற்புரை நல்கியது மிகவும் பாராட்டும் விதமாக அமைந்திருந்தது.

#TamilSchoolmychoice

நிறைவுரையினை ஆற்றிய மனிதவள அமைச்சர் மு. குலசேகரன் தாம் கடந்த 18 ஆண்டுகளாக அரசியலில் இருந்தாலும் இப்பொழுதுதான் முதன்முறையாக மலாயாப் பல்கலைக்கழகத்தின் அழைப்பு வந்தது என்று  அவரது கடந்த கால நினைவுகளைக் கூறியது மக்களை நெகிழவைத்தது. தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்தக் கல்விக் குழுவின் செயல் திட்டத்தை கட்டாயம் நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்ததும் மக்களின் கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது.

எளிமை, இனிமை, குழந்தைகளிடம் காட்டிய அன்பு எனும் இவரது இத் தன்மைகள் குழந்தை இலக்கியங்கள் மலேசியாவில் வெகு விரைவில் சிறப்பினையும் நிலையான இடத்தையும் பெறும் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை என்பதைக் கூறாமல் கூறின.

என்ன மனிதர் இவர்? எத்துணைப் போராட்டங்கள். இவற்றைச் சந்திக்க எத்துணை மனவலிமை வேண்டும்? அவர் நீடுழி வாழ வேண்டும் என்ற வாழ்த்தே அனைவர் இதயங்களிலும் எழுந்ததை அவரவரின் முகங்களே காட்டின. முத்தாய்ப்பான இந் நிகழ்ச்சியைத் தமிழகத்தில் இருந்து வந்திருந்த முனைவர் சிற்சபேசன் ஐயா அவர்களின் ‘குழந்தை இலக்கியத்தில் நகைச்சுவை’ எனும் பேச்சு…, அவையினர் அனைவரையும் குலுங்கக் குலுங்கக் சிரிக்க வைத்தது. வயிறு வலிக்கும் அளவுக்குச் சிரித்த அவர்கள், ஐயா அவர்கட்குத் தங்கள் கைத்தட்டலால் நன்றியினைத் தெரிவித்தனர்.

சரியாக 12.00 மணிக்கு முனைவர் இரா. குமாரவேலு மாநாட்டின் தீர்மானங்களை வாசித்தார்:

  1. குழந்தை இலக்கிய மாநாட்டை இரண்டு ஆண்டுகட்கு ஒரு முறை ஒவ்வொரு நாட்டிலும் நடத்துவது
  2. உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் குழந்தை இலக்கியங்களைத் தொகுத்து ஒரு குழந்தை இலக்கியக் ‘காப்பகம்’ நிறுவுவது
  3. ‘உலகத் தமிழ்க் குழந்தைகள் இலக்கியக் கழகம்’ ஒன்றை உருவாக்குவது உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்களை வாசித்தார்.

செயலராகிய திரு. மன்னர் மன்னன் அந்தத் தீர்மானங்களை ஏற்றார். இது குறித்துப் பேசிய முனைவர் மறைமலை இலக்குவனார்,“இன்று முதல் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கியக் கழகம்” உருவாகிவிட்டது என்றும் “அதற்கு நிரந்தரத் தலைவராக பாப்பா பாவலர் முனைவர் முரசு நெடுமாறன் இருப்பார் என்றும் இரண்டாவது மாநாடு தமிழகத்தில் புதுச்சேரியுடன் இணைந்து நடத்தப் பெறும்” என்றும் உறுதியளித்தார்.

-பேரா. முனைவர் இளமதி ஜானகி ராமன்

புதுவைப் பல்கலைக் கழகம்