‘மலேசியத் தமிழ் இலக்கியம்’ தொடக்கத்தில் குழந்தைகளுக்கு நாட்டுப்புற வடிவத்தில்தான் கிடைத்தது. இரண்டாம் உலகப் போர்க்காலத்திற்குச் சற்று முன்புதான் இங்கு எழுத்து வடிவம் பெறத் தொடங்கியது.


இதற்கு முன்னோடியாய் விளங்கியவர் சிங்கப்பூரில் வாழ்ந்த ந. பழநிவேலு. அவர் 1939ஆம் ஆண்டில் எழுதிய சிறுவர் பாட்டு அச்சு வடிவத்தில் வந்த முதல் சிறுவர் இலக்கியமாகக் கருதப்படுகிறது. அதே காலகட்டத்தில், 1941ஆம் ஆண்டு மலேசியாவில் வெளிவந்த ‘தமிழ்க்கொடி’ இதழில் தேவிதாசன் சிறுவர் பாட்டு எழுதியிருப்பதற்கான சான்றுகளும் உள்ளன. ‘தமிழ்க்கொடி’ இதழை அடுத்து 1951ஆம் ஆண்டு வெளிவந்த ‘சோலை’ என்ற இதழ் சிறுவர் இலக்கியத்தின் பால் நாட்டம் கொண்டது. ஆனால் அவ்விதழ், குறுகிய காலமே நடைபோட்டது.
சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்கென்று நூல்களோ, இதழ்களோ வெளிவர வாய்ப்பற்றிருந்த நிலையில், ‘தமிழ்முரசு’ நாளிதழ் மூலம் சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட (தமிழவேள்) கோ. சாரங்கபாணி, தம் ‘தமிழ்முரசு’-வில் ‘மாணவர் மணிமன்ற மலர்’ என்ற தலைப்பில் சிறுவர்களுக்காக ஒரு பகுதியைத் தொடங்கினார்; பின் தமிழ்முரசுடன் இணைந்த தனி (இலவயம்) இதழாகவும் 1953ஆம் ஆண்டு வெளியிட்டார். அதுதான் இந்நாட்டுச் சிறுவர் இலக்கியத்திற்கு உயிர்கொடுத்த பாசறையாகும்.


இவ்விதழ் ஏற்படுத்திய புரட்சி மிகப்பெரியதாகும். எண்ணற்ற மாணவர்களை எழுதத் தூண்டி, அவர்தம் படைப்புகளை வெளியிட்டு ஊக்கப்படுத்தியது தமிழ்முரசு-மாணவர் மணிமன்ற மலர். இன்று முதிர்ந்த எழுத்தாளராய், பாவலராய், ஆய்வாளராய் விளங்குவோரில் பலர், அவ்விதழில் எழுதப் பழகியவர்களே!
‘மாணவர் மணிமன்ற மலர், எழுதப் பழகியோர்க்குப் பயிற்சிக் களமாய் அமைந்தது. இரண்டாவது காலகட்டத்தில் சிறப்பான எழுத்தாளர்களாய் திகழ்ந்தவர்களில் பலர், அந்த உலைக்களத்தில் புடம் போட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்களாவர்.


தமிழ் முரசு மாணவர் மணிமன்ற மலரைத் தொடங்கிய பத்தாண்டுகளுக்குப்பின், ‘தமிழ்நேசன்’ ‘சிறுவர் அரங்கத்தைத் தொடங்கியது, பின்னர் எல்லா நாளிதழ்களும் சிறுவர்களுக்கு ஒரு பகுதியை ஒதுக்கி அவர்களை ஊக்குவித்தன. மு. அப்துல் லத்தீப்பு முதலாய ஆர்வலர், சிறுவர் இதழ் நடத்த முயன்றனர். ஆனால், அவை குறுகிய காலமே வெளிவந்தன.
சிறுவர்களுக்காக நீண்ட காலம் வெளிவந்த இதழ் சி.வே. கிருஷ்ணனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘திருமகள்’. மலேசியத் தமிழ்ச்சிறுவர் இலக்கியம் நூல்வடிவம்பெறத் தொடங்கிய ஆண்டு 1960. அவ்வாண்டில் ‘பரிதி’ என்ற புனைபெயர் கொண்ட மு.கந்தன் ‘முழுநிலா’ எனும் சிறுவர் நூலை வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து பலர் தம் நூல்களை வெளியிட்டுத் தமிழ்ச் சிறுவர் கவிதைத்துறை வளர்ச்சிக்கு துணை நின்றுள்ளனர்.
அவ்வரிசையில் சோம சன்மா, சி.வேலுசாமி, காவேரிநாதன், முரசு. நெடுமாறன், கா. களியபெருமாள், கவிஞர் பொன்முடி, தம்பாய் முனியாண்டி, கம்பார் கனிமொழி, பகதூர், ம.அ. சந்திரன், பெ.மு.இளம்வழுதி, ஜோசப் செல்வம், ஆ. கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னோடிகளாவர்.
இயந்திர, தொழில்நுட்ப வளர்ச்சியினூடே வளரும் குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது என்பதுபோல இலக்கியத்தின்பால் நாட்டமும் குறைந்தே இருக்கிறது. இந்நிலையில் இளைய சமுதாயத்தினரிடம் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த பெற்றோர், ஆசிரியர், இலக்கியம் சார்ந்த அமைப்புகள் ஆகியவற்றின் ஒன்றிணைந்த செயல்திட்டம் அவசியமாக இருக்கிறது.
இதை மனதில் இருத்தி, மலேசியத் தமிழ் பண்பாட்டு இயக்கம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் ஆதரவுடன் 8 முதல் 10 ஜூன் 2018 வரை (மூன்று நாள்கள்) முதலாம் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு ஒன்றை நடத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இம்மாநாட்டின் நோக்கம் ‘நலிந்துவரும் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் புத்துயிரூட்டல்’ என்பதாகும்.
படம், தகவல் – நன்றி – முதலாம் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாட்டு ஏற்பாட்டுக் குழு