கோலாலம்பூர் – அம்னோ தலைவர் பதவியில் இருந்து விலகி விட்ட பின்னரும், பிரதமராக இல்லாவிட்டாலும், தொடர்ந்து தன்னைப் பார்க்க வரிசையாக ஆதரவாளர்களும், பிரமுகர்களும் வந்து கொண்டிருப்பதால், தனக்கென ஒரு தனி அலுவலகம் ஒன்றை அமைக்க டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் திட்டமிட்டிருக்கிறார்.
அதே வேளையில், தனக்கெதிராக வரிசை கட்டி நிற்கும் வழக்குகள், புகார்கள் ஆகியவற்றைக் கையாள்வதற்கும் இந்த அலுவலகம் மையமாக இனி செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுமையிலுமிருந்து ஏராளமான அம்னோ தலைவர்களும் நஜிப்பைச் சந்திக்க வந்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்தத் தகவலை தனது முகநூல் பக்கத்தில் நஜிப் வெளியிட்டுள்ளார்.
“அவர்கள் என்னை வந்து சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, ஆதரவையும் புலப்படுத்துகின்றனர். நடப்பு விவகாரங்கள் குறித்து எனது கருத்துகளையும் கேட்கின்றனர். இடைவிடாத அளவுக்கு விருந்தினர்கள் என்னைச் சந்திக்க வந்த வண்ணம் இருக்கின்றனர். அதற்காக எனது நன்றி” என்றும் நஜிப் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எனினும் தனது அலுவலகம் எங்கு அமையும் என்பது குறித்து அவர் அறிவிக்கவில்லை.
இதற்கிடையில் எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலில் பெக்கான் தொகுதி தலைவர் பதவியை மீண்டும் தற்காக்கப் போவதாகவும் நஜிப் உறுதிப்படுத்தியுள்ளார்.
விரைவில் கொண்டாடப்படவிருக்கும் ஹரி ராயா பெருநாளை பெக்கான் நகரில் தனது குடும்பத்தினருடன் கொண்டாடப் போவதாகவும் நஜிப் தெரிவித்துள்ளார்.
அம்னோவின் அப்போதைய தலைவர் என்ற முறையிலும், தேசிய முன்னணி தலைவர் என்ற முறையிலும் பொதுத் தேர்தல் தோல்விகளுக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.
“தோல்வி குறித்த சோகம் போதும். இனி எழ வேண்டிய தருணம் வந்து விட்டது” என்றும் கூறிய நஜிப், நாட்டின் மேம்பாட்டிற்கு அம்னோ பல வகைகளிலும் தனது பங்களிப்பை வழங்கியிருக்கின்றது என்றும் நாட்டின் பல்வேறு வெற்றிகளுக்குக் காரணமாக இருந்திருக்கின்றது என்றும் பதிவிட்டுள்ளார்.
மே 9 பொதுத் தேர்தலில் பெர்லிஸ், பகாங் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் அம்னோ வெற்றி பெற்றது. நாடாளுமன்றத் தொகுதிகளில் 54 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.