
சிங்கப்பூர் : சிங்கப்பூரின் மிக முக்கியமான தமிழ் ஊடகங்களில் ஒன்று ‘தி சிராங்கூன் டைம்ஸ்’. அச்சு ஊடகமாகவும், இணைய ஊடகமாகவும் மாதமொரு முறை வெளியிடப்படும் இதழ். இந்த இதழின் 100ஆவது பதிப்பை வெளியிடும் சிறப்பு நிகழ்ச்சி கடந்த ஜூன் 30ஆம் தேதி வெளியீடு கண்டது. இப்பதிப்பை ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழ் நிறுவனர் எம் ஏ முஸ்தபா வெளியிட, முனைவர் வீரமணி பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறனும் கலந்து கொண்டார். எழுத்துரு குறித்த பல கட்டுரைகளை ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் முத்து நெடுமாறன் எழுதியுள்ளார். அவரின் நேர்காணல்களும் இந்த இதழில் வெளிவந்திருக்கின்றன. 2022-ஆம் ஆண்டில் “அன்றாடத் தொழில்நுட்பத்தில் தமிழ் நுழைந்த கதை” என்ற தலைப்பில் முத்து நெடுமாறன் எழுதிய கட்டுரை இந்த இதழில் இடம் பெற்றது.

உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பிரபல ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான சமஸ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதழின் ஆசிரியர் ஷாநவாஸ், தேசிய நூலக வாரியத்தின் தமிழ்ப் பிரிவுத் தலைவர் அழகிய பாண்டியன், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், வாசகர்கள் என பல தரப்பட்ட தமிழ் ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.
‘தி சிராங்கூன் டைம்ஸ்’ கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிங்கப்பூர் எழுத்தாளர்களின் பல்வேறு எழுத்துப் படிவங்களை தாங்கி இந்த இதழ் வெளிவருகிறது.
‘தி சிராங்கூன் டைம்ஸ்’ 100-வது இதழ் வெளியீட்டு விழாவில் ‘சிங்கப்பூரில் இதழியல் சந்திக்கும் சவால்கள்- அவற்றைக் கடந்து வெற்றி பெறும் வழிகள்’ குறித்து கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
எழுத்தாளர் மஹேஷ் குமார் கலந்துரையாடலின் நெறியாள்கையைக் கையாண்டார். இந்த கலந்துரையாடலில், சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத் தலைவர் அருண் மகிழ்நன், முத்து நெடுமாறன், எழுத்தாளரும் தமிழ் முரசு இணை ஆசிரியருமான கனகலதா ஆகியோர் பங்கேற்று தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.