கடந்த ஜூன் 29-ஆம் தேதி தன் 88-வது வயதில் காலமான டாக்டர் சைட் ஹூசேன் அலி மலேசிய அரசியலிலும், கல்வித் துறையிலும் சிறந்த பங்களிப்பை வழங்கியவராவார்.
1974-ஆம் ஆண்டு கெடா பாலிங் விவசாயிகளின் போராட்டம் – பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம் – ஆகியவற்றுக்குப் பின்னணியில் செயல்பட்டதாக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் கடந்த சனிக்கிழமை ஜூன் 29-ஆம் தேதி 88-வது வயதில் காலமான டாக்டர் சைட் ஹூசேன் அலி.
அவருடன் கைது செய்யப்பட்டு கமுந்திங் சிறையில் அடைக்கப்பட்டவர்தான் இன்றைய பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம். அன்வார் 20 மாதங்களில் விடுதலை செய்யப்பட, சைட் ஹூசேன் அலி 6 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். அரசியல் காரணங்களுக்காக அதிக ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் சைட் ஹூசேன் அலி எனக் கருதப்பட்டது. அதனையும் அன்வாரே முறியடித்தார். குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்காக அன்வார் சிறைவாசம் அனுபவித்தார் என்ற பதிவுகள் இருந்தாலும், அரசியல் காரணங்களுக்காகத்தான் அவர் சிறைவாசம் அனுபவித்தார் என்பதும் அதே காரணத்துக்காகத்தான் அவருக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டது என்பதும் வரலாறு.
சைட் ஹூசேன் அலி மறைவுக்காக இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) மலேசிய நாடாளுமன்றத்தில் மௌன அஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டது.
இரண்டு தவணைகளுக்கு 2009 முதல் 2015 வரை செனட்டராகவும் சைட் ஹூசேன் அலி பதவி வகித்துள்ளார். சமூக நீதிக்காகப் போராடிய மலாய் அரசியல்வாதி சைட் ஹூசேன் அலி ஆவார். சமூகவியல் துறையில் சிறந்த கல்விமானாகவும் திகழ்ந்தவர். மலேசிய தேசியப் பல்கலைக் கழகத்தின் தோற்றுநர்களில் அவரும் ஒருவராவார்.
பிகேஆர் கட்சியின் ஆலோசனை மன்றத்தின் துணைத் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.