கொழும்பு: இலங்கை அரசியலிலும், இலங்கைத் தமிழர்களின் போராட்டங்களிலும் நீண்ட காலமாக இரண்டறக் கலந்தவர் இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன். 91-வது வயதில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) காலமான சம்பந்தனின் மறைவுக்கு அனைத்துலக அளவில் அனுதாபங்கள் குவிந்து வருகின்றன.
முதுமை, உடல் நலக்குறைவு காரணமாக அவர் காலமானார். ஒரு வழக்கறிஞரான சம்பந்தன் தமது வாழ்நாள் முழுவதையும் இலங்கை இனப்பிரச்சினைக்குப் போராடியதிலும் அந்தப் பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வு கிடைப்பதிலும் செலவிட்டவர்.
கிழக்கு திரிகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பல தவணைகள் பதவி வகித்தார். எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.
சம்பந்தனின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் இராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
“தமிழர்கள் மட்டுமல்லாது இலங்கை மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் மரியாதையைப் பெற்ற அரும்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர் சம்பந்தன். இறுதி மூச்சு வரையிலும் தமிழ்மக்களின் நலனுக்காகவே சிந்தித்தார், செயல்பட்டார். இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்காக மிக நீண்டகாலம் அறவழியில் சம்பந்தன் அவர்கள் போராடி வந்தார்” என ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
இலங்கைத் தமிழர் உரிமைகளுக்காக போராடிய அமைப்புகளை ஒருங்கிணைத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கி அதன் தலைவராக செயல்பட்டவர் சம்பந்தன். தன் வாழ்நாள் முழுவதும் இலங்கைத் தமிழர் பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்க அவர் போராடினார்.