புதுடெல்லி, செப்டம்பர் 27 – உலகில் அனைத்துலக பயங்கரவாத இயக்கமாக விஸ்வரூபம் எடுத்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் 1000 இந்தியர்கள் இணைந்திருக்கலாம் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கின் பல நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், புனிதப் போர் எனும் பெயரில் தினந்தோறும் பல மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.
ஈராக்கின் ரக்கா நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ், தங்களது இயக்கத்தில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் வாயிலாக ஆள் சேர்த்து வருகின்றனர்.
இவர்கள் செய்யும் மூளை சலவையால் பெரும்பாலான இந்தியர்கள் மனம் மாறி தீவிரவாத இயக்கத்தில் இணைய சிரியாவிற்கு சென்றுள்ளார்.
குறிப்பாக தமிழ்நாடு, மும்பை, ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் இதுவரை இந்தியாவிலிருந்து மொத்தம் 1000 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் சேர்ந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் இந்தியா திரும்பினால் இங்கும் அந்த போரின் தாக்கங்களை ஏற்படுத்துவர் என கூறப்படுகிறது.