ஜெனிவா, செப்டம்பர் 27 – உலகத் தலைவர்கள் பங்கேற்கும் ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதம் எழுப்புவார் என பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாகவே இருந்து வரும் காஷ்மீர் விவகாரம் குறித்து, ஐ.நா.சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் பேச இருப்பதாக பரவலாக ஆருடங்கள் கூறப்பட்டன.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசு சமீபத்தில் அதனை உறுதி செய்தது. மேலும், இந்திய அரசு அழைப்பு விடுத்தால் மட்டுமே இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடர்வோம் என்றும் பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர் அகமத் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
“ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் நவாஸ் செரீப், காஷ்மீர் விவகாரம் குறித்து நிச்சயம் பேசுவார். அதனை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பொது வாக்கெடுப்பு நடத்துவதே காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்பது பாகிஸ்தானின் நம்பிக்கை.
தடைபட்ட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையை மீண்டும் நடைபெறச் செய்ய வேண்டிய பொறுப்பு இந்தியாவிடமே உள்ளது.”
“இருநாட்டு வெளியுறவுச் செயலர்களின் கூட்டத்தை முதலில் ரத்து செய்தது இந்தியாதான். எனவே இந்தியாவே அதனை சீர்படுத்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.