Home உலகம் நரேந்திர மோடி – ஜோ பைடன் சந்திப்பு

நரேந்திர மோடி – ஜோ பைடன் சந்திப்பு

722
0
SHARE
Ad

வாஷிங்டன் : அமெரிக்காவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24) அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.

அமெரிக்கா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஜோ பைடன் மோடியைச் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

இருதரப்பு விவகாரங்கள் குறித்து பைடனுடன் பேச்சு வார்த்தை நடத்திய மோடி, அமெரிக்காவில் நடைபெறும் குவாட் எனப்படும் (QUAD) கூட்டணி நாடுகளின் தலைவர்களின் கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

#TamilSchoolmychoice

குவாட் என்பது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகளைக் கொண்ட பாதுகாப்புக் கூட்டணியாகும்.

சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக, தங்களுக்குள் ஒரு கூட்டணியைக் கட்டமைத்துக் கொண்டு ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் உள்ள நான்கு முக்கிய நாடுகளின் கூட்டணியாக குவாட் திகழ்கிறது.

தனது அமெரிக்க வருகையின்போது மோடி, ஜப்பானியப் பிரதமர் சுகாவையும் அவரின் குழுவினரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.

ஜப்பானியப் பிரதமர் சுகாவைச் சந்தித்த மோடி…

குவாட் தலைவர்களின் சந்திப்புக் கூட்டத்திற்குப் பின்னர் மோடி வாஷிங்டனிலிருந்து புறப்பட்டு, நியூயார்க் சென்றடைந்தார்.

அங்கு ஐக்கிய நாட்டு மன்றத்தில் பொதுப் பேரவையில் உரையாற்றுவார்.

கமலா ஹாரிசுடனும் மோடி சந்திப்பு

கடந்த வியாழக்கிழமையன்று,  அமெரிக்க துணையதிபர் கமலா ஹாரிசுடன் சந்திப்பு நடத்தி பல்வேறு விவகாரங்கள் குறித்து மோடி விவாதித்தார்.

தங்களின் சந்திப்பில், சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை வாய்ந்த , அதே வேளையில் அனைத்துத் தரப்புகளையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் வட்டாரம் உருவாக்கப்பட மோடி-கமலா, இரு தரப்புகளும் தங்களின் கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்தினர்.

கொவிட்-19 தொடர்பில் இரு நாடுகளும் எடுத்து வரும் நடவடிக்கைகள், அந்த தொற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள், தடுப்பூசித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படுவது, முக்கிய மருந்துகளின் விநியோகம், சுகாதாரக் கருவிகளின் பயன்பாடு ஆகிய அம்சங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

அமெரிக்கா சென்றுள்ள மோடி அங்கு பல தொழிலதிபர்களையும் சந்தித்து, இந்தியாவில் முதலீடுகள் செய்யும்படி அழைப்பு விடுத்தார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal