Home நாடு ஸ்ரீராமுக்கு எதிரான ரோஸ்மாவின் நீதிமன்றப் போராட்டம் தொடர்கிறது

ஸ்ரீராமுக்கு எதிரான ரோஸ்மாவின் நீதிமன்றப் போராட்டம் தொடர்கிறது

767
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் துணைவியாரான ரோஸ்மா மன்சோர் தனக்கு எதிரான ஊழல் வழக்கில், அரசாங்கத் தரப்பு வழக்கறிஞராக கோபால் ஸ்ரீராம் வழக்காடக் கூடாது என்ற நீதிமன்றப் போராட்டத்தை மேல்முறையீடு மூலம் தொடர்கிறார்.

நேற்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தனக்கு எதிரான ஊழல் வழக்கைத் தள்ளுபடி செய்வதில் ரோஸ்மா தோல்வி கண்டார்.


மேலும் பார்க்க : தொடர்புடைய காணொலி :

#TamilSchoolmychoice


1.25 பில்லியன் டாலர் மதிப்புடைய சரவாக் மாநில பள்ளிகளுக்கான  சூரிய ஒளி வாங்கி திட்டத்தின்கீழ் அவர் ஊழல் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

தனக்கு எதிராக அரசாங்க வழக்கறிஞராக கோபால் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டிருப்பதை எதிர்த்தும் அவரின் நியமனம் செல்லாது என்றும் ரோஸ்மா வழக்கு தொடுத்து அதன் காரணமாக தனது ஊழல் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

எனினும் கோபால் ஸ்ரீராமின் அரசாங்க வழக்கறிஞர் நியமனம் செல்லுபடியாகும் என நீதிமன்றம் நேற்றைய (செப்டம்பர் 24) தீர்ப்பில் தெரிவித்தது. ஸ்ரீராம் அரசாங்க விதிமுறைகளுக்கு ஏற்பவும், சட்ட விதிமுறைகளுக்கு ஏற்பவும் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதையும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

எதிர்வரும் அக்டோபர் 5-ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் தொடங்கும் என்றும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நிர்ணயித்திருக்கிறது. அந்த நாளில் ரோஸ்மா தனக்கு எதிரான வழக்கில் சாட்சியாளராக தனது தற்காப்பு வாதத்தை வழங்க சாட்சிக் கூண்டில் ஏற வேண்டியிருக்கும்.

நேற்றைய கோலாலம்பூர் உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, அந்தத் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான முன் அறிவிக்கையை ரோஸ்மாவின் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்திருக்கின்றனர்.

அந்த மேல்முறையீட்டின் முடிவு தெரியும்வரை, ரோஸ்மாவின் ஊழல் வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டுமெனவும் வழக்கறிஞர்கள் மனு ஒன்றை சமர்ப்பித்திருக்கின்றனர்.

ரோஸ்மாவின் விசாரணை எதிர்வரும் அக்டோபர் 5-இல் தொடங்குவதால், இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டுமெனவும் ரோஸ்மாவின் வழக்கறிஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal