நியூயார்க், ஜூன் 24- கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பிய செவ்வாய்க்கிரகப் புகைப்படம் ஒன்றில் பிரமீடு வடிவம் இருப்பது பரபரப்பைத் தூண்டியுள்ளது.
பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த விண்கலம் தொடர்ந்து செவ்வாய்க் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பி வருகிறது. கடந்த மே 7-ம் தேதி அது அனுப்பிய புகைப்படம் ஒன்றில், பாறைகளுக்கு இடையே பிரமீடு போன்ற அமைப்பு ஒன்று இருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து வேற்றுக் கிரக உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்துவரும் ஆய்வாளர்கள்:
“பண்டைய நாகரிகத்தினர் கட்டிய பிரமிடைப் போல அது மிகவும் நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது. அது ஒளியின் மாயமாகத் தெரியவில்லை. ஒரு அறிவார்ந்த கட்டிடமாக உள்ளது. இந்தப் பிரமீடு ஒரு சிறிய மகிழுந்து அளவிற்கு உள்ளது. மீதமுள்ள பெரிய அமைப்பு செவ்வாயின் நிலப்பரப்புக்கடியில் இருக்கலாம். இதனால் பண்டைய எகிப்து நாகரிகத்தினர் செவ்வாய்க் கிரகத்தில் வாழ்ந்து இருக்கக் கூடும்” என்கின்றனர்.
இது என்ன மாயமோ, ஒளிகளின் ஜாலமோ தெரியவில்லை. ஆய்வாளர்கள் தான் ஆழ்ந்து அறிந்து உண்மை சொல்லுதல் வேண்டும்.