கோலாலம்பூர், மார்ச் 19 – ‘செத்தே போனேன்டி உன்ன பாக்கையில’ – கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலான மலேசிய இளைஞர்கள் தனது காதலியை நினைத்து முணுமுணுத்த பாடல் இதுவாகத் தான் இருக்கும்.
அந்த அளவிற்கு இந்த பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, வானொலி, தொலைக்காட்சி, மேடை நிகழ்ச்சிகள், கேளிக்கை விடுதிகள் என ஆட்டிப் படைத்தது.
ஓஜி தாஸ்,ஷாமினி ஆகியோருடன் பாடலைப் பாடியதோடு மட்டுமல்லாமல், மணி வில்லன்ஸ் உடன் இணைந்து பாடல் வரிகள் எழுதியிருப்பதுடன், இந்த பாடலுக்கு இசையமைத்தும் உள்ளார் கேஷ் வில்லன்ஸ்.
(‘தி மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சான்றிதழுடன் ஓஜி தாஸ். படம்: மலேசிய கலை உலகம் பேஸ்புக்)
இந்த பாடல் வரிகளில் இடையிடையே மலாய் வார்த்தைகள் கலந்திருந்தாலும், மலேசியாவில் பணியாற்றும் வெளிநாட்டுத் தமிழர்கள் மத்தியிலும் இந்த பாடல் அவ்வளவு பிரபலம்.
கடந்த 2012-ம் ஆண்டு, அக்டோபர் 15-ம் தேதி யூடியூப்பில் வெளியிடப்பட்ட இந்த பாடலை இதுவரை 2,866,061 பேர் பார்வையிட்டுள்ளதோடு, யூடியூப்பில் அதிகம் பேர் பார்வையிட்ட சிறந்த மலேசியத் தமிழ் பாடலாக தேர்வு பெற்று, ‘தி மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ -ல் இடம்பிடித்துள்ளது.