புத்ரா ஜெயா, மார்ச் 19 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மான்சோர் ஆகியோரின் மகளான நூர்யானா நஜ்வாவுக்கும், கஸகஸ்தான் நாட்டைச் சேர்ந்த டானியர் கெசிக்பாயேவுக்கும் இன்று ஸ்ரீ பெர்டானாவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ வீட்டில் திருமணம் நடைபெறவுள்ளது.
நூர்யானா நாஜ்யா வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்து தற்போது வென்சர் கேப்பிடல் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.
அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் டேனியரை சந்தித்திருக்கின்றார்.
இத்திருமணம் குறித்து பிரதமர் குடும்பத்தின் பிரதிநிதியாக, பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜமில் கிர் பஹாரோம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பிரதமர் நஜிப் துன் ரசாக் தானே முன்னின்று செய்வார் என்றும், கோலாலம்பூர், பெக்கான், பகாங் ஆகிய இடங்களில் நடைபெறும் திருமண விருந்தில் நஜிப், அவரது மனைவி மற்றும் டேனியர் குடும்பத்தினர் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், திருமண விருந்தில் மாமன்னர் துங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா ஹமீனா ஆகியோருடன், மலாய் ஆட்சியாளர்கள், மாநில மன்னர்கள், மந்திரி பெசார்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், மூத்த அரசாங்க அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், நிறுவன அதிபர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றும் ஜமீல் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திருமண விருந்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.