கொழும்பு, ஏப்ரல் 13 – இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வடக்கு மாகாணத்தில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, தனியாருக்குச் சொந்தமான 570 ஏக்கர் நிலங்களை இலங்கை அரசு ஞாயிற்றுக்கிழமை விடுவித்தது.
இலங்கையில் சிறுபான்மையின மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கொழும்பில், இலங்கை ராணுவத்தின் தலைமை அதிகாரி பிரிகேடியர் ஜெயந்த் ஜெயவீரா கூறுகையில், “யாழ்ப்பாணத்தில் உள்ள வலிகாமம் பகுதியில் ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 570 ஏக்கர் நிலம், மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.”
“அந்த நிலங்களை, அவற்றின் சட்டப்பூர்வ உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முறைப்படி வழங்கும்,” என்றார். இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற மைத்ரிபாலா சிறிசேனா அரசு, நல்லிணக்க நடவடிக்கையாக, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, 1,000 ஏக்கர் நிலங்களை தமிழர்களிடம் ஒப்படைத்துள்ளது.
இலங்கையில் 1980-ஆம் ஆண்டுகளில் உள்நாட்டுப் போர் தொடங்கிய பிறகு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, பொது மக்களின் நிலங்களை ராணுவம் கைப்பற்றியது.
கடந்த 2009-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு, இதைத் தொடர்ந்து, வடக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள், தங்களுடைய நிலங்களைத் திருப்பித் தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
அனைத்துலக சமூகமும் இலங்கை அரசை வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கை உள்நாட்டுப் போரின்போது வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கானோர், இன்னமும் முகாம்களில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.