Home தொழில் நுட்பம் இந்தியர்களின் இணையச் சுதந்திரம் பறிக்கப்படுமா?

இந்தியர்களின் இணையச் சுதந்திரம் பறிக்கப்படுமா?

680
0
SHARE
Ad

internetபுது டெல்லி, ஏப்ரல் 14 – கடந்த ஒரு வாரத்தில் மட்டும், இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘ட்ராய்’  (TRAI)-க்கு, 1.5 இலட்சம் எதிர்ப்பு மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், கடந்த மாத இறுதியில் ட்ராய், இந்தியாவில் ‘இணைய நடுநிலைமை’ (Net neutrality)-ஐ கட்டுப்படுத்துவதற்கான சில வரைமுறைகளை அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்திருந்தது. ட்ராய்-ன் இந்த யோசனையை எதிர்த்தே, இந்தியர்கள் மின்னஞ்சல்கள் மூலம் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கி உள்ளனர்.

இணைய நடுநிலைமை (Net neutrality):

இணையத்தை பொருத்தவரையில் நாம், வாட்ஸ் ஆப், பேஸ்புக்,  யூ- டியூப், ஸ்கைப் என எந்த சேவையை வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். கண்ணில் படும் புதிது புதிதான செயலிகளை பதிவிறக்கம் செய்ய முடியும். நமக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த நிபந்தனையற்ற சுதந்திரமே இணைய நடுநிலைமை. இந்த சுதந்திரத்தை மட்டுப்படுத்தவே இந்தியாவின் ட்ராய் முடிவு செய்துள்ளது. எனினும், இந்த முடிவு முதன் முதலில் அமெரிக்காவில் தான் ஆரம்பிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

லாபம் அடையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்:

ட்ராய் எடுத்துள்ள இந்த திடீர் முடிவிற்கு, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தொடர் வற்புறுத்தலே காரணம். வாட்ஸ் ஆப், ஸ்கைப், பேஸ்புக் மாதிரியான இலவச சேவைகள் அறிமுகமானது முதல், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இலாப சதவீதம் இறங்குமுகமாகத் தொடங்கிவிட்டது. தற்போது, எந்தவொரு பயனரும், குறுந்தகவல் அனுப்புவதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்களின் எந்தவொரு ‘பிளான்’ (Plan)-னையும் பயன்படுத்துவதில்லை. காரணம், பெரும்பாலானவர்கள் வாட்ஸ் ஆப் போன்ற சேவைகளைப் பயன்படுத்துவதால்.

இதன் தாக்கத்தை உணர்ந்த நிறுவனங்கள், இணையச் சுதந்திரத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என போர்க்கொடி உயர்த்தின.

ட்ராய் கூறும் புதிய விதிமுறைகள்:

ஒருவேளை ட்ராய் இணையச் சுதந்திரத்தில் மாற்றம் கொண்டு வந்தால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கு பணம் செலுத்தும் சேவைகளை மட்டும் பயனர்கள் பயன்படுத்த அனுமதிக்கும். உதாரணமாக பேஸ்புக் நிறுவனம், ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு பணம் செலுத்தவில்லை என்றால், அந்த நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தும் பயனர்களுக்கு, பேஸ்புக்கின் சேவை நிறுத்தப்படும்.

முழுக்க முழுக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இலாபம் ஈட்டுவதற்காகவே உருவாக்கப்பட உள்ள இந்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது முதல் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. ஆர்வலர்கள் சிலர் இதற்காக Savetheinternet.in என்ற தளத்தை தொடங்கி, தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.

எவ்வாறாயின், ட்ராய் இது தொடர்பான இறுதி முடிவினை எதிர்வரும் 22-ம் தேதிக்குப் பிறகு எடுக்கும் என்று கூறப்படுகிறது.