சென்னை : உலகின் பெரும் பணக்காரர் – தொழில்நுட்ப சிற்பி – பில் கேட்ஸ் உதிர்த்த ஒரு வாசகம் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும். ‘நீங்கள் செய்யும் ஒரு வணிகம் அல்லது தொழில் அடுத்த 18 மாதங்களில் இன்னொரு தொழில் நுட்பக் கண்டுபிடிப்பால், மாற்றத்தால், முற்றாகத் துடைத்தொழிக்கப்படும். அதற்குத் தயாராக இருக்க வேண்டும்’ என்பதுதான் அந்த வாசகம்.
இந்தியத் தேர்தல் களத்தில் – குறிப்பாக தமிழ்நாட்டில் – நவீன இணைய ஊடகங்கள் மூலமாக – இதுவரை தொலைக்காட்சிகளை நம்பியிருந்த நிலைமை பெருமளவில் மாறி வருவதை கண்கூடாகக் காண முடிகிறது.
2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் களங்களில், தமிழ் நாட்டுத் தொலைக்காட்சி ஊடகங்கள் கள நிலவரங்களை வழங்குவதிலும், அரசியல் கண்ணோட்டங்களை மக்களுக்குக் கொண்டு சென்றதிலும் முக்கியப் பங்கு வகித்தன.
அனைவரும் தமிழ்நாடு தொலைக்காட்சி அலைவரிசைகளில் நடத்தப்படும் விவாத மேடைகளை இரசித்தனர். பல பின்புல அரசியல் அம்சங்கள் அந்த விவாதங்களில் முன்வைக்கப்பட்டன.
இப்போது இணைய ஊடகங்களின் வருகையால் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது. தொலைக்காட்சி ஊடகங்களில் யாரும் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. ஏராளமான விளம்பரங்கள் ஒரு இடையூறு. தேர்தல் காலம் என்பதால், கட்சிகளின் தேர்தல் விளம்பரங்கள் – பிரச்சார நேரலைகள் கூடுதலாக சேர்ந்து கொள்கின்றன.
கட்சிகளின் விளம்பரப் பணத்தை எதிர்பார்த்துச் செயல்படும் தமிழக தொலைக்காட்சி ஊடகங்கள் பலவற்றை மூடி மறைக்கின்றன. எந்தக் கட்சிக்கும் எதிரான எவ்விதக் கருத்தையும் முன்வைப்பதில்லை. விவாத மேடைகளில் கலந்து கொள்ள வருபவர்கள் கூட, தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் அதே நிலைப்பாடுகளைப் பற்றிப் பேசி போரடிக்கச் செய்கிறார்கள். அப்படியே யாராவது ஓரிரு பத்திரிகையாளர்கள் துணிச்சலுடன் ஏதாவது எதிர்கருத்தை முன்வைத்தால், உடனே நெறியாளர் குறுக்கிட்டு விவாதத்தை திசை திருப்புகிறார் – நிறுத்துகிறார். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது ‘ஒரு சிறிய விளம்பர இடைவேளை’.
வழக்கமான தொலைக்காட்சி செய்திகளும் நிகழ்ச்சிகளும் அடிக்கடி நிறுத்தப்பட்டு, முக்கியத் தலைவர்களின் பிரச்சாரங்கள் இடையிடையே ஒளிபரப்பாகின்றன. எல்லாம் விளம்பரப் பணம்தான்!
இந்த சூழ்நிலையில்தான் சில அரசியல் ஆய்வாளர்கள், குறிப்பாக ஊடகவியலாளர்கள் துணிச்சலுடன் பல கருத்துகளை இணைய ஊடகங்களில் விவாதிக்கிறார்கள். ஆதன், ஆகாயம், மின்னம்பலம், என பல தனியார் இணைய ஊடகங்கள் இத்தகைய ஊடகவியலாளர்களிடம் நேர்காணல் நடத்தி பல விவகாரங்களை அம்பலப்படுத்துகின்றன.
அந்த அரசியல் ஆய்வாளர்களும், வழக்கமாகத் தொலைக்காட்சியில் கூறப்படாத பல சர்ச்சைக் கருத்துகளை இத்தகைய நேர்காணலில் துணிச்சலுடன் தெரிவிக்கின்றனர். விளம்பர இடைவேளைகள் இல்லை. சில நேர்காணல்கள் – அரசியல் சம்பவங்கள் நடந்தவுடன் உடனுக்குடன் சுவாரசியத்துடன் கட்டமைக்கப்படுகின்றன. அதிலும் நீங்கள் யூடியூப் தளத்தின் பிரிமியம் சந்தாவைக் கட்டி விட்டால் – தங்கு தடையின்றி விளம்பரங்களின் இடையூறுகள் இன்றி காணொலிகளைத் தொடர்ந்து காணலாம்.
இதனால் இந்த இந்தியப் பொதுத் தேர்தல் களத்தில் இப்போதெல்லாம் பலரும் ஆர்வத்துடன் பார்ப்பது இத்தகைய நேர்காணல்களைத்தான்!
இந்த அரசியல் ஆய்வாளர்களின் கருத்துகளையும் அப்படியே முழுமையாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. பலருக்கும் சொந்த வெறுப்பு விருப்புகள் – சில தலைவர்களின் மீது, கட்சிகளின் மீது, காட்டங்கள் – இருப்பதைக் காண முடிகிறது. இருப்பினும் தொலைக்காட்சி ஊடகங்களை விட அதிகமான பரபரப்புத் தகவல்களை இந்த அரசியல் ஆய்வாளர்கள் இணைய ஊடகங்களின் வழி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக அவர்களின் விளக்கங்களின் மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் சாதிவாரி நிலைமைகளை நீங்கள் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளலாம்.
இந்த வகையில் ஆங்கில, இந்தி ஊடகங்களின் நாயகன் பிரசாந்த் கிஷோர். பிரபல தேர்தல் ஆலோசகர். தமிழில் சவுக்கு சங்கர், ரவீந்திரன் துரைசாமி, லெட்சுமணன், மணி, ரங்கராஜ் பாண்டே, தராசு ஷ்யாம், கலை, துக்ளக் ரமேஷ் என பலரும் தங்களின் பரபரப்பான நேர்காணல்கள், தரவுகள் மூலம் இணைய ஊடகங்களை கலக்கி வருகிறார்கள்.