கோலாலம்பூர் : மலேசியாவில் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய உளவாளி ‘ஷாலோம் அவிதான்’ இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். 6 துப்பாக்கிகளையும் 158 குண்டுகளையும் அவர் சட்டவிரோதமாக வைத்திருந்தார் என 38 வயதான அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டன.
குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் விசாரணை கோரினார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
கறுப்பு நிற டி-சட்டை, கறுப்பு நிற முகக் கவசத்துடன் அவிதான் இன்று காலை 8.11 மணியளவில் நீதிமன்றத்திற்குள் கொண்டுவரப்பட்டார். அவரின் வழக்கு காரணமாக, உள்நாட்டு, வெளிநாட்டு நிருபர்கள் நீதிமன்ற வளாகத்தில் அதிகாலை முதல் பெருமளவில் குழுமியிருந்தனர்.
அவிதானுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. விசாரணைக்கான அடுத்த தேதி மே 21 என நிர்ணயிக்கப்பட்டது. நீதிமன்ற விசாரணை முடிந்து அவர் காலை 10.50 மணியளவில் பாதுகாப்பு கவச வாகனங்களுடன் நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
கடந்த மார்ச் 27-ஆம் தேதி அவர் ஜாலான் அம்பாங்கிலுள்ள தங்கு விடுதி ஒன்றில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் வசம் 6 கைத்துப்பாக்கிகளும் 200 குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.
தன் குடும்பப் பிரச்சனை காரணமாக, இன்னொரு இஸ்ரேலியரைக் கொல்வதற்காக, தான் மலேசியா வந்ததாக அவிதான் புலன் விசாரணையின்போது தெரிவித்தார் என காவல்துறைத் தலைவர் (ஐஜிபி) கூறியிருந்தார்.
அவிதானின் கைதைத் தொடர்ந்து 16 பேர் இதுவரையில் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவிதானுக்கு துப்பாக்கிகளை விற்பனை செய்த தம்பதிகளும் அவர்களில் அடங்குவர். அவிதானின் கார் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவராவார்.
அவிதான் பிரான்ஸ் நாட்டின் அதிகாரத்துவ அனைத்துலகக் கடப்பிதழை வைத்திருந்தார்.