கோலாலம்பூர், டிசம்பர் 27 – இந்தியாவின் வெளிநாட்டு இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கின்றார். அவர் மலேசிய மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தை சந்தித்து மலேசியாவில் வேலை செய்யும் இந்திய தொழிலாளர்கள் நலன்கள் தொடர்பாக விவாதித்தார்.
வயலார் ரவிக்கு வரவேற்பு வழங்கிய டாக்டர் சுப்ரமணியம், மலேசியாவில் வேலை செய்யும் இந்தியத் தொழிலாளர்களின் நலன்களை மலேசிய அரசாங்கம் எப்போதும் உறுதி செய்யும் என்று கூறினார். அதன் ஒரு கட்டமாகத்தான் 6-பி எனப்படும் அந்நியத் தொழிலாளர் மறுபதிவு நடவடிக்கை மேற்கொண்டப்பட்டது என்றும், தொழிலாளர்களின் அனுமதியோடுதான் அவர்களின் கடப்பிதழ்களை முதலாளிகள் வைத்திருக்க முடியும் என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
வயலார் ரவி, டாக்டர் சுப்ரமணியம் சந்திப்பின்போது, மலேசியாவில் சுமார் 74 ஆயிரம் இந்திய தொழிலாளர்கள் சட்டபூர்வமாக வேலை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு ஐந்தாண்டு கால வேலை அனுமதி (பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் வயலார் ரவி மகிழ்ச்சி தெரிவித்தார்.