திரிபோலி, ஏப்ரல் 20 – ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் தங்களது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், 30 எத்தியோப்பிய கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்யும் காணொளியை வெளியிட்டு உலகை மீண்டும் பதைபதைக்க வைத்துள்ளனர்.
லிபியா, ஈராக், சிரியா ஆகிய நாடுகளை ஒருங்கிணைத்து தனித்த இஸ்லாமிய அரசை உருவாக்க நினைக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர், வேற்று மதத்தவர்களையும், லிபியா, ஈராக்கில் மாட்டிக் கொள்ளும் தங்கள் எதிர்ப்பு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களையும் கொடூரமாக கொலை செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
சமீபத்தில், லிபியாவில் மாட்டிக் கொண்ட எத்தியோப்பிய கிறிஸ்தவர்கள் 30 பேரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்து, அதனை காணொளியாக்கி நேற்று வெளியிட்டுள்ளனர். அந்த காணொளியில், பிணைக்கைதிகள் இரண்டு வேறு இடங்களில் தனித்தனி பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
எத்தியோப்பிய கிறிஸ்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்றும், அவர்கள் தங்கள் மதத்தை பரப்ப நினைத்தால் இதுபோன்ற படுகொலைகள் தொடரும் என்றும் ஐஎஸ் இயக்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.