புதுடெல்லி, ஜூன் 24- வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட டெல்லி அரசு மருத்துவர்கள் மீது ‘எஸ்மா’ சட்டம் பாய்ந்தது. இதனால் அவர்கள் வேலை நிறுத்தத்தைத் திரும்பப் பெற்றனர்.
டெல்லி மாநில அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் மற்றும் அவசரக்காலச் சிகிச்சைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், மருத்துவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்; மருத்துவர்கள் தெரிவித்த கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
ஆனால், மந்திரியின் வாக்குறுதியை மருத்துவர்கள் ஏற்கவில்லை.தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் நீடித்தது.
இதையடுத்து, மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக டெல்லி அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. ‘எஸ்மா’ என்னும் அத்தியாவசியச் சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை மருத்துவர்கள் மீது பிறப்பித்தது.
இதனால் வேறு வழியின்றி டெல்லி அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தைத் திரும்பப் பெற்றனர். வழக்கம் போல் தங்கள் பணிகளை இன்று மேற்கொண்டனர்.