கொல்கத்தா, ஜூன் 24- அன்னை தெரசாவின் அறக்கட்டளைத் தலைவராகிய சகோதரி நிர்மலா நேற்று காலமானார்.
அன்னை தெரசா, ஏழைகள் மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவும் வகையில் ‘‘மிஷினரிஸ் ஆப் சேரிட்டி’’ என்ற தொண்டு நிறுவனத்தை 1950–ல் நிறுவினார்.
அன்னை தெரசா 1997–ம் ஆண்டு மார்ச் 13–ந் தேதி காலமானார். அவர் இறப்பதற்கு 6 மாதத்திற்கு முன்பே தனது வாரிசாகக் கருதிய நிர்மலாவைத் தலைமைப் பொறுப்பு ஏற்கச் செய்தார்.
இந்து மதத்தைச் சேர்ந்த நிர்மலா அம்மையார், ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் 1934–ம் ஆண்டு பிறந்தார். அன்னை தெரசாவின் சேவை உணர்வைக் கண்டு 1958–ல் கத்தோலிக்கக் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, அவருடன் இணைந்து சேவை செய்யத் தொடங்கினார்.
அவரை அனைவரும் ;சகோதரி நிர்மலா’ என்று அன்போடு அழைக்கத் தொடங்கினர்.
கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று காலையில் அவர் அமரரானார்.
அவரது இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
சகோதரி நிர்மலா மறைவு குறித்து மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “அன்னை தெரசாவுக்குப் பின் சிறப்பாகத் தொண்டாற்றி வந்த சகோதரி நிர்மலா ஜோஷியின் மறைவு, கொல்கத்தாவுக்கு மட்டுமின்றி உலகுக்கே பெரிய இழப்பு” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், “ஏழை எளியவர்களுக்குத் தனது வாழ்வை அர்ப்பணித்த சகோதரி நிர்மலா மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.