கலிபோர்னியா, ஜூலை 3- விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாகி விட்ட அமெரிக்காவில், தம்பதியர் இருவர் 75 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து, சேர்ந்தே உயிரை விட்ட செய்தி எல்லோருக்கும்ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் ஒரு சேர வரவழைத்திருக்கிறது.
அந்த ஆத்மார்த்தமான தம்பதியரின் பெயர் ஜேனெட் (96), அலெக்சாண்டர் (95).
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஜேனெட் (96), அலெக்சாண்டர் (95). இருவரும் சிறு வயதில் நண்பர்களாகப் பழகத் தொடங்கி, 1940-ஆம் ஆண்டு கணவன்- மனைவி ஆனார்கள்.
75 ஆண்டுகள் ஆனந்தமாகச் சேர்ந்து வாழ்ந்த இந்தத் தம்பதிக்கு 5 குழந்தைகளும், 10 பேரக் குழந்தைகளும் 6 பேர் கொள்ளுப் பேரப் பிள்ளைகளும் உள்ளனர்.
அண்மைக்காலமாய், முதுமை காரணமாக உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு இருவரும் அவதிப்பட்டு வந்தனர். அருகருகே படுக்கையில் இருந்தபடியே இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர்.
“இருவரும் ஒரே நேரத்தில் இறந்து போக வேண்டும். அதுதான் எங்களது ஆசை” என்று தங்களது பிள்ளைகளிடம் தெரிவித்து வந்த அவர்கள், அவர்களது ஆசைப்படியே இருவரும் ஒரே படுக்கையில் கைகோர்த்தபடியே இறந்து போனார்கள்.
உணர்ச்சிப்பூர்வமான காரியங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காத அமெரிக்க மக்களைக் கூட இந்நிகழ்ச்சி நெகிழ வைத்திருக்கிறது.