நியூ யார்க், ஜூலை 4 – அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி எண்ணிக்கையில் மட்டுமல்லாமல் தரத்திலும் அதிகரித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. குறிப்பாகக் ‘கலிபோர்னியா தமிழ் அகாடமி’ (California Tamil Academy), அமெரிக்காவில் தமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழ்க் கலாச்சார வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றி வருகிறது.
தமிழ், இந்தியாவில் 23 மொழிகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் முதன்மை மொழியாகவும் மட்டுமல்லாமல் சிங்கப்பூரின் தேசிய மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. தமிழின் வளர்ச்சி பற்றி இலங்கையில் தனிப்பட்டுக் குறிப்பிடுவதற்கு ஒன்றுமில்லை. சிங்களமும், தமிழும் தான் அங்கு முதன்மை மொழிகள். இப்படி இருக்கையில், தமிழ் இனி மெல்லச் சாகும் எனப் பலர் எதிர்வாதம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அத்தகைய விமர்சனங்களைப் பொய்யாக்கும் வகையில், பல்வேறு நாடுகளில் தமிழ், பரவலாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கு ஒரு உதாரணம் தான் அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளிகள்.
அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் பற்றி லாஸ் ஏஞ்சல்ஸ் தமிழ்ப் பள்ளியின் தலைவர் ராஜேந்திர மல்லிசெட்டி கூறுகையில், “எங்களின் முக்கிய நோக்கம் தமிழ் கற்றுக் கொடுப்பது தான். தமிழ் மொழியில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் மட்டும் கற்றுக் கொடுக்காமல் தமிழக வரலாறு பற்றியும், தமிழ்க் கலாச்சாரம் பற்றியும் எங்கள் பள்ளிகளில் கற்றுக் கொடுக்கிறோம்”என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் முதன்மைத் தமிழ்க் கல்வி நிறுவனமாக இருந்து வரும் கலிபோர்னியா தமிழ் அகாடமி, 1998-ம் ஆண்டு பே ஏரியாவில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு 13 மாநிலங்களில் 40 பள்ளிகளை உருவாக்கிப் பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இப்பள்ளிக் குழுமத்தில் மட்டும் சுமார் 5,500 மாணவர்கள் மற்றும் 700 தன்னார்வலர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி அமெரிக்காவில் மட்டுமல்லாமல் வேறு சில நாடுகளிலும் காலூன்றி உள்ளது.
“தமிழ் நாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய தம்பதிகளின் குழந்தைகள் அமெரிக்காவில் வளரும் போது, தமிழ் மொழியின் சிறப்பினைக் கற்றுக் கொள்ளாமலே இருந்துவிடுகின்றனர். எங்கள் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது முதல் அத்தகைய நிலை உருவாகாமல் பார்த்து வருகின்றோம். இனியும் அது போன்ற நிலை வராது” என்று ராஜேந்திர மல்லிசெட்டி தெரிவித்துள்ளார்.