கோலாலம்பூர், ஜூலை 10 – முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு இன்று 90 வயது நிறைவடைகின்றது. 1925ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி பிறந்த அவரது அதிகாரப்பூர்வ பிறந்த நாளாக டிசம்பர் 20ஆம் தேதிதான் எப்போதும் குறிப்பிடப்படும்.
பிறந்த தேதி மாற்றத்திற்கு உண்மையான காரணம் என்னவென்று தெரியாவிட்டாலும், அவரது தந்தை அவரைப் பள்ளியில் சேர்ப்பதற்காகத் தேதியை மாற்றினார் எனக் கடந்த காலங்களில் சில கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
90 வயதானாலும், மகாதீரின் நடை, உடை, பாவனை, நடவடிக்கைகளில் இன்னும் தொய்வையோ, தளர்வையோ பார்க்க முடிவதில்லை.
பதவியை விட்டு விலகினாலும், சோர்வில்லை – தொய்வில்லை!
2003ஆம் ஆண்டில் பதவியை விட்டு விலகிய காலத்திலிருந்து இன்றுவரை சோர்வு காட்டாமல் மலேசிய அரசியலில் தன் பெயர் இன்றும் தகவல் ஊடகங்களிலும், மக்கள் மனங்களிலும் நின்று நிலைக்கும் வண்ணம் வளைய வந்து கொண்டிருக்கின்றார் மகாதீர்.
இன்றும் தொலைக்காட்சிகளில் பேட்டி தருகின்றார். நாள் தவறாமல், தனது வலைதளத்தில் தனது கருத்துகளைப் பதிவு செய்கின்றார். கூட்டங்களில் கலந்து கொள்கின்றார். எத்தகைய உணர்ச்சிவசப்படக் கூடிய கேள்விகளையும், இலாகவமாகக் கையாண்டு பதில் தருகின்றார்.
ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக அவரது தனித்துவமாக விஸ்வரூபம் எடுத்து நிற்பது பிரதமர் நஜிப்புக்கு எதிராகப் பல்வேறு அஸ்திரங்களைப் பிரயோகித்து, அவரை வீழ்த்துவதில் அரசியல் களத்தில் – இன்றைக்கும் தனது 90 வயதிலும் – முன்னணியில் நிற்கும் அவரது துணிவுதான்.
தனது மகன் கெடா மந்திரி பெசாராக இருந்தாலும், பெட்ரோனாஸ், புரோட்டான் சாகா போன்ற அரசு நிறுவனங்களின் ஆலோசகராகத் தான் செயல்பட்டு வந்தாலும், தயங்காமல், தயவு தாட்சண்யமின்றி, பிரதமருக்கு எதிரான அதிரடித் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றார் மகாதீர்.
மகாதீர் நஜிப்புக்கு எதிராக விடுத்த அஸ்திரங்கள், இன்று நஜிப்பைச் சுற்றி வளைத்து, அவரைப் பதவியில் இருந்து வீழ்த்தும் இறுதிக் கட்டத்திற்கு அவரைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது என்றே தோன்றுகின்றது.
1எம்டிபி-நஜிப்பின் அரசியல் தவறுகள்-அவரது ஆடம்பர வாழ்க்கை-அவரது மனைவி ரோஸ்மாவின் அரசியல் தலையீடு-ரோஸ்மாவின் ஆடம்பரத்தனம்- இப்படிப் பல விவகாரங்களை நஜிப்புக்கு எதிராக ஒருமுகப்படுத்தி – நஜிப்பை வீழ்த்தும் தனது போராட்டத்தை மக்கள் போராட்டமாகவே முன்னெடுத்துச் சென்றதில் முன்னணி வகித்தவர் மகாதீர்தான்.
பல தலைவர்களை உருவாக்கினார் – வீழ்த்தினார்
பிரதமராக இருந்த காலத்திலும் பிரதமர் பதவியை விட்டு விலகிய பின்னரும் பல முக்கிய அம்னோ அரசியல் தலைவர்களை வீழ்த்துவதில் மகாதீர்தான் முக்கிய பங்கு வகித்தார் என்பது வரலாற்றுப்பூர்வ உண்மைகள்.
தனது தலைமைத்துவத்தில் துணைப் பிரதமர்களாக இருந்த துன் மூசா ஹீத்தாம், துன் கபார் பாபா, நிதியமைச்சராக இருந்த துங்கு ரசாலி ஹம்சா, ஆகியோரை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்டுவதில் வெற்றி கண்டவர் மகாதீர்.
அவரது உச்சகட்ட ஒழிப்பு அன்வார் இப்ராகிம்தான். ஆனால், அவர் செய்த அந்த ஒரு தவறுதான் இன்று அம்னோ-தேசிய முன்னணிக்கு எதிராகப் பிகேஆர் கட்சியாகவும் – தேசிய முன்னணியையே பொதுத் தேர்தல் களத்தில் வீழ்த்தும் சக்தி வாய்ந்த எதிர்க்கட்சிக் கூட்டணியாகவும் உருவெடுத்து நிற்கின்ற காரணமாகி விட்டது.
அப்துல்லா படாவி, நஜிப் ஆகியோர் பின்னாளில் பிரதமர்களாகப் பதவியில் அமர்ந்ததற்கும், மொய்தீன் யாசின் துணைப் பிரதமராக இன்று உலா வருவதற்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தவரும் மகாதீர்தான்.
90வது வயதில், தனது வாழ்வின் இறுதிக் கட்ட இலக்காக, சபதமாக – நஜிப்பை வீழ்த்தும் அரசியல் வியூகத்தை உருவகப்படுத்தி – ஒருமுகப்படுத்தி – செயல்படுத்தியும் உள்ள மகாதீர் அதன் விளைவுகளை – விடைகளை இன்னும் சில நாட்களில் – அல்லது சில வாரங்களில் மலேசிய மக்கள் மன்றத்தில் முன்வைப்பார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
ஆம்! நஜிப் கூடியவிரைவில் பதவி விலகுவார் என்பது ஏறத்தாழ உறுதியான ஒன்றாகிவிட்டது.
இன்று தனது பிறந்த நாளில் எத்தனையோ பரிசுப் பொருட்கள் குவிந்தாலும் – நஜிப் பதவியை விட்டு விலகினார் என்பதே மகாதீரைப் பொருத்தவரை – அவரது 90வது வயதில் அவருக்குக் கிடைத்த சிறந்த பிறந்த நாள் பரிசாகக் கருதுவார் என்பது திண்ணம்!
-இரா.முத்தரசன்