சென்னை, ஜுலை 24- கோயம்பேடு முதலான பேருந்து நிலையங்களில் குழந்தைகளுக்குத் தாய்மார்கள் பாலூட்ட, சகல வசதியுடன் தனி அறைகள் தயாராகி வருகின்றன.
பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பெண்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையில், கைக் குழந்தைகள் அழுதால், குழந்தைக்குப் பாலூட்ட பெண்கள் தர்ம சங்கடத்திற்கு ஆளாகிறார்கள். தாய்ப்பால் கொடுப்பதைக் கூட சிலர் காமக் கண்களோடு பார்ப்பதால், அழும் குழந்தைக்குப் பாலூட்டத் தயங்குகிறார்கள் தாய்மார்கள்.
எனவே, பாலூட்டும் பெண்களுக்கென்று வசதியான வகையில் தனி அறை அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதனால், கோயம்பேடு பேருந்து நிலையம் உட்பட அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் இதற்கென்று தனி அறை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒரே இடத்தில் இரண்டு அறைகள் அமைக்கப்படுகின்றன.ஓர் அறையில் ஏழெட்டுப் பேர் ஒரே சமயத்தில் அமரும் வகையில் சொகுசு இருக்கைகள், குளிர்சாதன வசதி, மின் விளக்குகள் போன்றவை அமைக்கப்படுகின்றன.
மேலும்,சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, குழந்தைகள் உடை மாற்றுவதற்குச் சிறு அறை ஆகியவையும் அமைக்கப்படுகின்றன.
இந்த அறைகள் அடித்த மாதம் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.