சென்னை, ஜூலை 31- சென்னையின் கடற்கரைப் பகுதிகளில் நேற்றிரவு திடீரெனக் கடல் உள்வாங்கியதால் மக்களிடையே சுனாமி பீதி ஏற்பட்டது. இதனால், கடற்கரையோரக் குடியிருப்புகளில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்துடன் இரவைக் கழிக்கும் சூழ்நிலை உருவானது.
2004-ல் ஏற்பட்ட மிகப் பெரிய சுனாமிக்குப் பிறகு, அடிக்கடி கடல் உள்வாங்கும் நிகழ்வு ஏற்படுகிறது.கடல் உள்வாங்கும் போதெல்லாம் மக்கள் பீதியடைய வேண்டியதாகிறது.
ஏனெனில், 2004ல் இப்படித்தான் கடல் உள்வாங்கிப் பின் திடீரெனச் சுனாமியாக உருவெடுத்து லட்சக் கணக்கான மக்களைக் காவு வாங்கியது. அதனால், கடல் உள்வாங்கினாலே மக்கள் பீதிக்குள்ளாகிறார்கள்.ஆனால், 2004க்குப் பிறகு அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
நேற்றிரவு சென்னை மெரினா கடற்கரை தொடங்கி, பட்டினப்பாக்கம், சாந்தோம், பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை வரை கடல் நீர் திடீரென 50 மீட்டர் அளவிற்கு உள்வாங்கியதால், மீண்டும் சுனாமி வருமோ எனக் கடற்கரையோரம் வசிக்கும் மக்களிடையே பதற்றம் உருவாகி, இரவு முழுவதும் தூக்கமில்லாமல் பீதியிலேயே இரவைக் கழித்தனர்.
அதிகாலையில் கடல் இயல்பு நிலைக்கு வந்த பிறகே சற்று நிம்மதியடைந்தனர்.