கன்னியாகுமரி, ஜூலை 31- மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், மதுக்கடைகளை அகற்றக் கோரியும் கைபேசிக் கோபுரத்தில் ஏறி நின்று ஐந்து மணி நேரமாகப் போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடைப் பகுதியில் பள்ளிக்கூடம் மற்றும் கோயிலுக்கு அருகே அரசு மதுபானக் கடை உள்ளது. இக்கடைக்கு வரும் குடிமகன்களால் மாணவ மாணவியருக்கும், கோயிலுக்கு வரும் பெண்களுக்கும் பெரும் தொந்தரவாக உள்ளது.
இதனால் அந்தக் கடையை அகற்றக் கோரி பொதுமக்களும் சமூகச் சேவையாளர்களும் பல போராட்டங்களை நடத்தியும், மதுபானக் கடைகளை அகற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகையால், காந்தியவாதி சசிபெருமாள் தலையிலான மதுவிலக்குப் போராட்டக் குழு இன்று காலை அப்பகுதிக்கு வந்து, மதுக்கடைகளை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டது.
அப்போது, 200 அடி உயரமுள்ள கைபேசிக் கோபுரத்தின் உச்சியில் ஏறிய காந்தியவாதி சசிபெருமாள், மதுக்கடைகளை அகற்றாவிட்டால் தீக்குளிப்புப் போராட்டம் நடத்தப்போவதாக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், மதுக்கடையை அகற்றும் வரை கைபேசிக் கோபுரத்திலிருந்து இறங்கப் போவதில்லை என்று கூறி கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கும் மேலாகக் கைபேசி கோபுரத்திலேயே நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
கைபேசிக் கோபுரத்திலேயே மயங்கிய நிலையில் இருந்த காந்திவாதி சசிபெருமாளைக் காவல்துறையினரும் தீயணைப்புப் படை வீரர்களும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால்,அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்செய்தியால் அப்பகுதி மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்களுக்காகப் போராடித் தனது இன்னுயிரை விட்டுவிட்டார் சசிபெருமாள்.
இவர் மதுவுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியதோடு மட்டுமல்லாமல், டெல்லியிலும் பூரண மதுவிலக்கு கோரிப் போராட்டங்களை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரைக் கொடுத்துப் போராடியிருக்கிறார். இனிமேலாவது மதுக்கடைகள் அகற்றப்படுமா?