Home கலை உலகம் திரைவிமர்சனம்: சகலகலாவல்லவன் – அவ்வளவு பெரிய அப்பாடக்கரெல்லாம் இல்ல!

திரைவிமர்சனம்: சகலகலாவல்லவன் – அவ்வளவு பெரிய அப்பாடக்கரெல்லாம் இல்ல!

1071
0
SHARE
Ad

Sakalakala-Vallavan-Appatakkar-Trailer-copy

கோலாலம்பூர், ஜூலை 31 – லஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி, சூரி, திரிஷா, அஞ்சலி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் அப்பாடக்கர் … இல்ல இல்ல சகலகலா வல்லவன் .. அதுவும் இல்ல சககலாவல்லவன் என்ற அப்பாடக்கர் .. பெயர்லயே இவ்வளவு குழப்பமா?

ஜெயம் ரவியின் படங்களிலேயே திரையரங்கில் உட்கார்ந்து பார்க்க முடியாத அளவிற்கு போரடிக்கும் படம் என்றால் இந்தப் படம் தான் என்று சொல்லும் அளவிற்கு, மொக்கை கதையும், ஒரே நேர்கோட்டில் எந்த ஒரு திருப்பமும் இல்லாமல் நகரும் திரைக்கதையும், இரட்டை அர்த்த வசனங்களும், படு கேவலமான வரிகளைக் கொண்ட பாடல்களும் என ஒட்டுமொத்த கலவையாக உருவாகியுள்ளது ‘சககலாவல்லவன்’.

#TamilSchoolmychoice

கார்த்தியை வைத்து ‘அலெக்ஸ் பாண்டியன்’ என்ற படத்தை இயக்கிய சூரஜ் தான், சகலகலா வல்லவன் படத்தையும் இயக்கியுள்ளார். யு.கே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். நா.முத்துக்குமார், மதன் கார்க்கி உள்ளிட்டோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

கதை என்ன?

Sakalakala-Vallavan-Movie-Review02

ஒரு கிராமம்.. அங்கு உள்ள ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு தான் ஜெயம்ரவி. நாலஞ்சு அடிபொடிகளோடு வேலை வெட்டி எதுவும் இல்லாமல் அந்த கிராமத்தை சுற்றி வந்து கொண்டிருக்கிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலியை காதலிக்கிறார். ஜெயம்ரவிக்கு அந்த கிராமத்தில் இருக்கும் ஒரே எதிரியாக நம்ம சூரி.

இப்படியாகப் போய் கொண்டிருக்கும் கதையில் திடீரென ஜெயம்ரவியின் தாய்மாமா ராதாரவி அந்த கிராமத்திற்கு வருகிறார். தனது மகள் திரிஷாவின் திருமணத்தை அந்தக் கிராமத்தில் நடத்தத் திட்டமிடுகிறார். அப்போது அந்தத் திருமணம் திடீரென ஒரு காரணத்தால் நின்று போகிறது.

தனது அப்பா பிரபு சொல்வதைக் கேட்டு திரிஷாவிற்கு தாலி கட்டும் ஜெயம்ரவி அதற்குப் பின் சந்தோஷமாக வாழ்ந்தாரா? இல்லையா? என்பது தான் மீதி கதை.

நடிப்பு

sakalakala-vallavan-445

ஜெயம்ரவி நன்றாக நடித்திருக்கிறாரா? என்று பார்ப்பதை விட அவரது நடிப்பிற்குத் தீனி போடும் படியான கதையோ அல்லது வித்தியாசமான கதாப்பாத்திரமோ இந்தப் படத்தில் கிடையாது. அண்மையில் வெளியான ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் கூட சொல்லிக் கொள்ளும்படியாக அவரது நடிப்பு அமைந்திருந்தது. ஆனால் இந்தப் படத்தில் அது கூட இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பார்ப்பதற்கு சற்று உடல்பெருத்து ஏதோ விடுமுறையைக் கழிப்பதைப் போல் படத்தை நடித்து முடித்துக் கொடுத்திருப்பது போல் தெரிகின்றது.

அவரைப் போல் தான் அஞ்சலியும்.. பட வாய்ப்புகள் இல்லாமல் ஒரு சுற்றுப் பெருத்துவிட்டார். பாவாடை தாவணியில் வரும் காட்சிகளிலாவது ஏற்றுக் கொள்ளும் படியாக இருக்கிறார். திடீரென ஒரு பாடல் காட்சியில் பொருத்தமே இல்லாத நாகரீக உடையணிந்து படம் பார்ப்பவர்களை நெளிய வைக்கிறார்.

திரிஷா .. படத்தில் இடைவெளிக்குப் பின்னர் தான் வருகிறார். அவருக்கும் சுவாரஸ்யமான கதாப்பாத்திரமெல்லாம் கிடையாது. ஏனோ வந்து போகிறார். வந்தவருக்கு அஞ்சலிக்கு இணையாக ஜெயம்ரவியுடன் ஒரு பாடல் காட்சியையும் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

பிரபு, ரேகா, ராதாரவி, சித்ரா லக்‌ஷ்மணன், இத்தனை முன்னணி நடிகர்கள் இருந்தும் படத்தில் மூன்று பேருக்கு மட்டும் தான் அதிகமான காட்சிகள் ஒன்னு சூரி, இரண்டாவது ஜெயம்ரவி, மூன்றாவது மொட்டை ராஜேந்திரன்..

இரண்டாவது கதாநாயகனாகப் படம் முழுவதும் வருகிறார் சூரி.. அப்படியே வடிவேலுவின் பாணியைப் பின்பற்றுகிறார்.

அடுத்ததாக நடிகர் விவேக்.. வித்தியாசமான தோற்றத்தில் வந்தாலும், பார்த்துப் பார்த்து புளித்துப் போன அவரது அதர பழசான வித்தைகளையெல்லாம் காட்டியிருக்கிறார். இரட்டை வேடம் வேறு .. அதுவும் இரட்டை அர்த்த வசனங்களைப் பேசிக் கொண்டு.. ஷ்ஷபா..

சூரியின் சகிக்க முடியாத காமெடியைப் பொறுத்துக் கொண்டு முதல் பாதியை ஒருவழியாகக் கடத்திவிட்டு அமர்ந்தால், இரண்டாம் பாதியில் விவேக் காமெடி, தேர்தல், பிரச்சாரம் என்று ஜவ்வாக இழுக்கிறது திரைக்கதை.

ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு

Sakalakala-Vallavan-Tamil-Movie-new-Stills-5

செந்தில் குமார் ஒளிப்பதிவில் கிராமத்துக் காட்சிகள் ஓரளவு ஆறுதல்… ஒரு எளிமையான கதைக்குத் தேவையான காட்சிகள் அத்தனையும் அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

படத்தொகுப்பில் செய்யப்பட்ட ஒரு வித்தியாசமான முயற்சி கவனிக்க வைத்தது. ஒவ்வொரு காட்சியும் முடிந்து அடுத்த காட்சி வரும் பொழுது கிராபிக்ஸ் மூலம் செய்யப்பட்டிருந்த இணைப்பு கவர்ந்தது.

ஆனால் க்ளோசப் காட்சி ஒன்றில் அஞ்சலியின் தலையில் சாவகாசமாக பறந்து பறந்து விளையாடிய ‘ஈ’ ஒன்றை எடிட்டிங்கில் கவனிக்காமல் விட்டது ஏனோ? அந்தக் காட்சியில் கேமராவில் பதிவாகிவிட்ட ‘ஈ’ படம் பார்ப்பவர்களை தன் பக்கம் திருப்பிக் கொண்டு விட்டது.

அதே போல், அணைக்கட்டில் சூரியும் அவரது நண்பர்களும் கையில் சிப்ஸ் பாக்கெட்டை வைத்து தின்று கொண்டே பேசிக் கொண்டிருக்கும் காட்சியை வைத்த இயக்குநர், அந்த காட்சியில் அவர்கள் இயல்பாக சிப்ஸை சாப்பிடுகிறார்களா என்று கவனிக்க மறந்தது ஏனோ? அதில் ஒருவர் … சிப்ஸை சாப்பிடுவதைப் போல் ‘நாடகத் தனமாக’ நடிக்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகின்றது. இது போன்ற அப்பட்டமான தவறுகள் முன்னணி ஹீரோ நடிப்பில் ஒரு தரமான படத்தைத் தான் பார்க்கிறோமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

படத்தின் பாடல்களை சிம்பு, ரம்யா நம்பீசன், டி.இமான் உள்ளிட்ட பிரபலங்கள் பாடியிருக்கின்றனர். ‘ஹிட்டு சாங்’ பாட்டு கேட்கும் ரகமாக இருந்தது. மற்ற பாடல்கள் மனதில் நிற்கவில்லை.

படத்தில் “புஜ்ஜிமா.. புஜ்ஜிமா செல்லக்குட்டி புஜ்ஜிமா.. மாமா உன்னை பஜ்ஜி போடப் போறான். ” என்ற ‘தத்துவப் பாடல்’ ஒன்றை முன்னணிப் பாடலாசியர் ஒருவர் எழுதியுள்ளார். ஏன்ணே இப்படி?

சரி.. படம் பார்க்கலாமா? வித்தியாசமான கதை விரும்பிகளுக்கும், ஜெயம்ரவியின் காதல், ஆக்சன் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் இந்தப் படம், நகைச்சுவையை எதிர்பார்த்துச் செல்லும் காமெடிப் பட ரசிகர்களை நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும்.

– ஃபீனிக்ஸ்தாசன்