பெட்டாலிங் ஜெயா, மார்ச்.11- சைபுல் புகாரி அஸ்லானின் தந்தை பிகேஆரில் சேர முடிவுசெய்து பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கட்சி செலயலகத்தில் அவரின் விண்ணப்பப் பாரத்தை இன்று சமர்ப்பித்தார்.
அன்வார் இப்ராகிம் தம்முடன் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டியவர் சைபுல். அக்குற்றச்சாட்டு வழக்கில் கடந்தாண்டு ஜனவரியில் அன்வார் விடுவிக்கப்பட்டார்.
“நான் என்றுமே பிகேஆரை ஆதரிக்கிறேன். தற்போது அன்வார் இப்ராகிம் தலைமையில் உள்ள கட்சியில் சேரப்போகிறேன்”, என்று அஸ்லான் முகம்மட் லாஜிம் செய்தியாளர்களிடம் கூறினார். பிகேஆர் தலைமையகக் கட்டிடத்தில் விண்ணப்ப பாரத்தை ஒப்படைத்த பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு அவர் பேசினார்.
அஸ்லான், “பிரதமர் துறையில் உள்ள உயர் அதிகாரி ஒருவர்”அன்வார்மீது தவறான வதந்தி பரப்ப தம்மையும் தம் மகனையும் பயன்படுத்திக்கொண்டார் என இரண்டு நாட்களுக்குமுன் அறிக்கை விடுத்திருந்தார். இதன் தொடர்ச்சையாக இன்று பிகேஆர் விண்ணப்ப பாரத்தை சமர்ப்பித்து பிகேஆர் கட்சியில் இணைந்தார்.
“பிகேஆர் பொது செயலாளராகிய நான் சைபுலின் தந்தை கொடுத்த விண்ணப்ப பாரத்தை ஏற்றுக் கொள்வதோடு அதனை கட்சியின் அரசியல் குழுவிடம் சமர்ப்பித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்” என்று பிகேஆர் கட்சியின் பொதுச் செயலாளர் சைபுதீன் நசுதீன் கூறினார்.
சைபுல் அன்வார் விவகாரம் தொடர்பாக கடந்த 8ஆம் தேதி மார்ச் செல்லியலில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.