Home கருத்தாய்வு எஸ்பிஎம் தேர்வில் 10 பாடங்களுக்கு மட்டுமே அனுமதி: தமிழ்ப் பாடத்தை எடுப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் மறைமுக...

எஸ்பிஎம் தேர்வில் 10 பாடங்களுக்கு மட்டுமே அனுமதி: தமிழ்ப் பாடத்தை எடுப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் மறைமுக சதியா?

841
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 11 –  ஆசிரியர்கள்-மாணவர்களைக் காரணம் காட்டி, அவர்களின் கல்விச் சுமையை குறைப்பதாக சொல்லி எஸ். பி. எம் தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே எடுக்கமுடியும் என்ற, துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் அறிவிப்பு தமிழார்வம் மிக்க இந்தியர்களிடையே மிகப்பெரிய அதிருப்தியையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

TAMIL1ஏமாந்தவர்கள் தமிழினமா?

ஏற்கனவே ‘இண்டர்லோக்’ நாவல் ஏற்படுத்திய பிரச்சினையிலிருந்து மீண்டுள்ள தமிழினம், அதற்குள் இந்தப் பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு நிச்சயம் மாணவர்களை தமிழ்-தமிழ் இலக்கியம் எடுப்பதிலிருந்து அவர்களை விலக்கியே வைக்கும். தமிழ் மொழி பாடங்களின் மீதான அவர்களின் ஈடுபாட்டையும் குறைக்கவே செய்யும்.

தமிழ் மொழியை தேர்வுக்காகவாவது படிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்திலாவது தமிழ் எடுக்கும் மாணவர்கள் தமிழை இதுவரை ஒரு பாடமாக எடுத்துப் படித்து வந்தார்கள். அவர்களால் தான் தமிழ்மொழியே பள்ளிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் வாழ்ந்து வந்தது இன்னும் வளர்ந்து வருகின்றது என்றால் அது மிகையாகாது.

எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகளில் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் பாடமாக எடுத்தவர்கள்தான் பல்கலைக் கழகங்களில் மாணவர்களாக நுழைந்தார்கள் என்பதும் அவர்களால்தான் மலாயாப் பல்கலைக் கழகம் போன்ற பல்கலைக் கழகங்களில் தமிழ் இன்னும் நிலைத்து நீடித்து வருகின்றது என்பதும் நிதர்சனமான உண்மை.

ஓர் இனத்தின் அடையாளமாகத் திகழக் கூடிய அவர்களின் தாய்மொழியையே மறைமுகமாக அழிக்க நினைக்கும் ஒரு முயற்சிதான் இந்த 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற கல்வி அமைச்சரின் அறிவிப்பு.

அதற்காக கல்வி அமைச்சர் காட்டுகின்ற காரணம், ஆசிரியர்கள்-மாணவர்கள் மீதான கல்விச்சுமை என்பது  வேடிக்கையாக இருக்கிறது- தாயை சுமையென எண்ணும் மனப்பாங்கு போன்றது அல்லவா இது!

தமிழுக்கு ஆசிரியரை நியமிப்பதும், தமிழ்த் தேர்வுக்கு உண்டாகும் செலவையும் சுமையென சொல்கிறாரோ கல்வி அமைச்சர்?

நிலையான கல்விக் கொள்கை இல்லாத அரசு

ஏற்கனவே ஆரம்பக்கல்வியை தாய்மொழியில் கற்கலாம் என அமல்படுத்தி, பின் அதிலும் சில மாற்றம் செய்து, இப்போது எஸ். பி. எம் வரை தேர்வு இல்லை என அறிவித்து அவ்வப்போது மக்களின் அதிருப்தியை சம்பாதித்து வந்த அரசு, இப்போது எடுத்துள்ள முடிவால் ஒட்டுமொத்த தமிழர்களின் வெறுப்பையே சம்பாதித்துவிட்டது எனலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த 10 பாட கட்டுப்பாட்டு அறிவிப்பை முஹிடின் செய்தபோது நாடு தழுவிய நிலையில் எல்லா அமைப்புகளும், கண்டனம் தெரிவித்து, அதற்கு விளக்கம் அளித்தபின் ஏற்றுக்கொண்டு,10 பாடங்களோடு கூடுதல் இரண்டு பாடங்களை எடுக்கலாம் என  நடைமுறைப்படுத்திய இதே கல்வி அமைச்சரான முஹிடினுக்கு இப்போது நேர்ந்தது என்ன?

இதன் விளைவை தேசிய முன்னணி அரசாங்கம் சந்திக்க வேண்டி வரும்

இந்த முடிவை அவர்கள் மீட்டுக்கொள்ளாவிட்டால் நிச்சயம் இன,மான உணர்வுள்ள தமிழர்கள், அரசுக்கு எதிராக வாக்களிப்பதை தேசிய முன்னணி அரசால் தடுத்து நிறுத்த முடியாமல் போகலாம்.

பொதுத் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் தமிழ் மொழியையும், தமிழ் இலக்கியத்தையும் ஒரு பாடமாக எடுக்கும் மாணவர்களின் ஆர்வத்திற்கு தடை போடும் – தமிழை கல்விக் கூடங்களில் வளர்க்க நினைப்பவர்களின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் – கல்வி அமைச்சரின் இந்த முடிவானது நிச்சயம் தமிழ் வாக்காளர்களின் மனங்களில் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளை விதைக்கும் என்பதோடு, ஏற்கனவே தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீது மற்ற காரணங்களால் வெறுப்புற்று இருப்பவர்களுக்கு, அவர்களின் வெறுப்புணர்ச்சியை மேலும் தூண்டிவிடும், தூபம் போடும் என்பதையும் தேசிய முன்னணி அரசாங்கத்தினர் கவனத்தில் கொள்ளவேண்டும்.

குறிப்பாக, ம.இ.காவினர் – தமிழ் மொழியைக் காக்க வேண்டிய கடமையில் – பொறுப்பில் இருக்கும் ம.இ.கா தலைவர்கள் – இந்த நிலைமைக்கு தீர்வு காணாவிட்டால், அவர்களுக்கும் இது பெரும் பாதிப்பாய் முடியும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது

ஏற்கனவே 1999இல் தமிழ் இலக்கியம் எடுத்தோர் எண்ணிக்கை 400 ஆக மட்டுமே இருந்த நிலையில் பல்வேறு தமிழ் அமைப்புகளும்,தமிழ் ஆர்வலர்களும் போராடி 2000 ஆம் ஆண்டு இலக்கியம் எடுக்கும் மாணவர்களை 4000 ஆக ஆக்கினர்.

அவ்வப்போது பற்பல காரணங்களால் இந்த எண்ணிக்கை சரிந்தாலும் தமிழ் உணர்வு மிக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஊக்கப்படுத்தி தமிழையும்,இலக்கியத்தையும் எடுக்கச்செய்தே வருகின்றனர்.

அதோடு, தமிழ்ப் பள்ளிகளுக்கு செல்லாத பல மாணவ மாணவியர்  தமிழார்வத்தின் காரணமாக – பெற்றோரின் ஊக்கம் காரணமாக – சொந்தமாக தமிழ் படித்து, எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்துப் படித்து தேர்வும் எழுதி வந்திருக்கின்றனர் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

இனிவரும் காலங்களில் இந்த 10 பாடக் கட்டாயத் திட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டால் இந்த தரப்பினரும் தமிழை எஸ்பிஎம் தேர்வுகளில் ஒரு பாடமாக எடுத்துப் படிப்பதைக் கைவிடும் நிலைமை ஏற்படும் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

ஆகவே ம இ கா வும், அமைச்சர்களும் ஆவன செய்வார்கள் என நாம் அமைதியாக இருக்காமல், ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும், தங்கள் உணர்வுகளை எதிர்ப்பாக காட்டினாலன்றி இதற்கு ஒரு சாதகமான முடிவு வராது.

உபயோகப்படுத்தப்படாத எந்த மொழியும் அழிந்தே போகும். காலப்போக்கில் தமிழ்ப் பள்ளிகளில் தமிழைப் படிப்பவர்கள்,  அதோடு முடிந்தது -அதற்குப் பின் அவர்கள் எஸ்பிஎம்  போன்ற தேர்வுகளில் தமிழையோ தமிழ் இலக்கியத்தையோ எடுக்க முடியாமலே போகும் நிலைமை ஏற்படலாம்.

அதன் பின்னர் பல்கலைக் கழகங்களிலும் தமிழ் மொழி பயன்படுத்தப்பட முடியாத, படிக்க முடியாத சூழ்நிலை உருவாகி விடும்.

காலப் போக்கில் தமிழ் மொழியின் பயன்பாடும், தமிழ்க் கல்வியும் அழிவதற்கு நமது தலைமுறையிலேயே நாம் இடம் கொடுத்தோம் என்று பழிச்சொல் நமக்கு நேர வேண்டாம்.

அதற்கான தீர்வை இப்போதே காண்பதற்கு நெருக்குதல் தருவோம்! அவரவர்களுக்கு இயன்ற வழிகளில்!

– சா. விக்னேஸ்வரி