புதுடில்லி – முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு டில்லியில் டெங்குக் காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அங்கு டெங்குக் காய்ச்சலுக்கு இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்பட்டுள்ளது.
வடக்கு டில்லியில் 352 பேர், தெற்கு டில்லியில் 220 பேர், கிழக்கு டில்லியில் 73 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக டில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய 2 லட்சம் வீடுகளில் டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த வீடுகளில் கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.மேலும், கொசு உற்பத்தி ஆகாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும்படி அந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு டில்லி மாநகராட்சி கடிதமும் அனுப்பியுள்ளது.
டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டில்லியில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் வேகமாக குறைந்து வந்து மரணம் ஏற்படும். எனவே, நோயாளிகளின் ரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரிக்க ஒட்டகப்பால், ஆட்டுப்பால் போன்றவை கொடுக்கப்படுகின்றன.
இதனால் டில்லியில் ஒட்டகப்பால் மற்றும் ஆட்டுப்பால் விலை எக்கச்சக்கமாக ஏறியுள்ளது.