கோலாலம்பூர் – எதிர்வரும் செப்டம்பர் 16-ம் தேதி, மலாய்காரர்களுக்காக நடைபெறும் ‘சிவப்புச் சட்டை’ பேரணியை முன்னிட்டு, இஸ்லாம் அல்லாதவர்கள் அன்றைய தினம் கோலாலம்பூரைத் தவிர்ப்பது நல்லது என்று ‘காபுங்கான் என்ஜிஓ – என்ஜிஓ மலாயு’ என்ற இயக்கத்தின் தலைவர் டத்தோ ஜமால் முகமட் யூனோஸ் இன்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து தற்போது வாட்சாப் போன்ற நட்பு ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் எச்சரிக்கையை இஸ்லாம் அல்லாதவர்கள் பின்பற்றுவது நல்லது என்றும் அவர் மலேசியாகினி இணையதளத்திடம் குறிப்பிட்டுள்ளார்.
“இது போன்ற பேரணிகள் யாவும் போராட்டங்கள். எனவே அதில் கலந்து கொள்பவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பர்”
“பேரணியின் போது ஒருவேளை அவர்கள் தங்களுக்கு போட்டியான குழுவினரை சந்தித்தால், கண்டிப்பாக அங்கு ஆத்திரங்கள் மேலோங்கும். அப்படி ஆத்திரங்கள் ஏற்பட்டால், தேவையில்லாத சம்பவங்கள் நிகழுமோ என்று அஞ்சுகிறோம்” என்று சுங்கை பெசார் அம்னோ பிரிவுத் தலைவருமான ஜமால் முகமட் யூனோஸ் தெரிவித்துள்ளார்.