சான் பிரான்சிஸ்கோ – (நேற்று ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபேட் புரோ எனப்படும் கையடக்கக் கருவியில் சிறப்பு அம்சங்களை விவரிக்கும் கட்டுரை)
இனிமேல் நாம் எவ்வாறு அலுவலகங்களில் பணியாற்றப் போகின்றோம் என்பதையே மாற்றியமைக்கும் வண்ணம், கணினிக்கான மாற்றாக ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் புரோ கையடக்கக் கருவியை இன்று அறிமுகப்படுத்தியது.
ஐபேட்டை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வது எப்படி எனச் சிந்தித்த ஆப்பிள் தொழில் நுட்ப வடிவமைப்பாளர்களின் உழைப்புதான் ஐபேட் புரோ என ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் அறிமுக நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.
அதிக திறன்வாய்ந்த இந்த ஐபேட் புரோ, தொடுதிரையில் திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பெரிய அளவில் பார்க்க முடியும். தெளிவாக நூல்களைப் படிக்கவும், ஆவணங்களைப் பரிசீலிக்கவும் இயலும்.
12.9 அங்குல குறுக்களவு கொண்டது இந்த புதிய ஐபேட் புரோ. 5.6 மில்லியன் பிக்சல்ஸ் எனப்படும் துல்லிய தொழில்நுட்பத்தைக் கொண்டது என்பதால் இதில் புகைப்படங்கள், திரைப்படங்கள் மிக அழகாக, துல்லியமாகத் தெரியும்
ஐபேட் புரோவைக் கொண்டு ஆவணங்களை சுலபமாக பார்க்கவும் படிக்கவும் முடியும்.
கடந்த ஐபேட்டுகளை விட 1.8 தடவைகள் கூடுதல் விரைவாக புதிய ஐபேட் புரோ செயல்படும்.
இந்த ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய, அதி நவீன தயாரிப்பாக ஐபேட் புரோ பார்க்கப்படுகின்றது.
கடந்த 12 மாதங்களில் வெளிவந்த கைகளால் எடுத்துச் செல்லக் கூடிய கணினிகளை விட 80 சதவீதம் அதிக சக்தி வாய்ந்தது புதிய ஐபேட் புரோ. 10 மணி நேர மின்கல (பேட்டரி) சக்தியைக் கொண்டுள்ளது.
அத்துடன் முழுமையான ஒலிபெருக்கி வசதிகளையும் ஐபேட் புரோ கொண்டுள்ளது (Full Speaker system).
78 சதவீத பெரிய திரையிருந்தாலும், மிகச் சிறிய அளவிலேயே கூடுதல் எடையை ஐபேட் புரோ கொண்டுள்ளது.
மேலும், இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட விசைப் பலகை (கீபோர்ட்) உடன் இணைத்துக் கொள்ளலாம். எழுத்துகளை பதிவு செய்ய (டைப் செய்ய) மிகவும் எளிதாக அமைந்த விசைப் பலகை இதுவாகும்.
ஆப்பிள் ஐ-பென்சில்
ஐபேட்டில் கைகளால் வரைய முடியும். இருப்பினும் இதற்கென சிறப்பு ஐபேட் எழுதுகோல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐ-பென்சில் என அழைக்கப்படும் இதனைக் கொண்டு கூர்மையோடு ஐபேட் திரையில் துல்லியமாக படங்கள் வரையலாம். நுண் வரைகலை வடிவங்களை (கிராபிக்ஸ்) உருவாக்கலாம். அழகிய வண்ணங்களோடு ஐ-பென்சில் கொண்டு வரைய முடியும்.
ஐபேட்டிலேயே இணைத்து இந்த ஐ-பென்சில்களை மின்கல சக்தி ஏற்றிக் (சார்ஜ்) கொள்ளலாம்.
ஆப்பிள் நிறுவனத்தில் மைக்ரோசோப்ட் உயர் அதிகாரி விளக்கம்
இன்றைய ஆப்பிள் அறிமுக விழாவில் உச்ச கட்ட அதிர்ச்சியாக அமைந்தது, மைக்ரோசோப்ட் உயர் அதிகாரி மேடையேறி, மைக்ரோசோப்ட் ஆபிஸ் மென்பொருள் தொழில் நுட்பம் ஐபேட்டில் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது குறித்து விளக்கியதுதான்.
உலகின் இரண்டு மாபெரும் தொழில் நுட்ப நிறுவனங்கள் இணைந்த படைப்பாக ஐபேட் புரோ அமைகின்றது.
இரண்டு அதிநவீன தொழில்நுட்பத் திறன்களும் இணைவதால் கூடுதலான பலன்களை ஐபேட் புரோவில் பயனர்கள் பெற முடியும்.
அடோபி புகைப்பட மெருகூட்டும் வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளது
அடோபி நிறுவனத்தின் மென்பொருளும் ஐபேட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், போட்டோஷோப் எனப்படும் தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படங்களை மெருகேற்ற முடியும். அறிமுக விழாவில், சிரிக்காத பெண்ணின் புகைப்படம் ஒன்றைக் காட்டி பின்னர் அந்தப் புகைப்படத்தில் அந்தப் பெண் சிரிப்பதுபோல் மாற்றிக் காட்டி அசத்தினார்கள்.
நவம்பர் முதல் ஐபேட் புரோ விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பயன்கள் – பரிமாற்றங்கள்
ஐபேட் புரோ மூலம் மருத்துவர்கள் பெரும் பயன் பெற முடியும். உடலின் எலும்புகளை, தசைகளை படமாக எடுத்து – அதில் நோயாளிகளுக்கு எந்த இடத்தில் வலியோ – எலும்பு முறிவோ ஏற்பட்டிருக்கின்றது என்பது மருத்துவர்கள் பகிர்ந்து கொள்ள முடியும்.
இதுவரை வந்த கையடக்கக் கருவி வெளியீடுகளில் அதிக தெளிவு – மல்டி டச் எனப்படும் பல்முனைத் தொடுதிரை என கையடக்கக் கணினிப் பயன்பாட்டை அடுத்த கட்டத்திற்கு – அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப் போகும் அதிசயமாக ஐபேட் புரோ பார்க்கப்படுகின்றது.
தொகுப்பு – இரா.முத்தரசன்