குப்பர்ட்டினோ, அக்டோபர் 17 – ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஐபேட் ஏர் 2 (Apple iPad Air 2) மற்றும் ஐபேட் மினி 3 (iPad Mini 3) என்ற இருவகைத் தட்டைக் கணினிகளும் அடுத்த சில மாதங்களில் உலகையே ஆக்கிரமிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கையடக்கக் கருவிகளில் முன்னணி வகிக்கும் ஆப்பிள் இதுவரையில் 225 மில்லியனுக்கும் மேற்பட்ட ஐபேட் – கருவிகளை விற்பனை செய்துள்ளது.
புதிய ஐபேட் ஏர் 2 மிகவும் மெலியதாகும். 6.1 மில்லி மீட்டர் அளவே கொண்டது என்றாலும் கரங்களில் வைத்து இயங்கக் கூடிய அளவுக்கு சிறப்பாக செயல்படுவதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூடுதல் கொள்ளிட சக்தியையும், கூடுதல் சக்தி வாய்ந்த படம் எடுக்கும் கருவியையும் கொண்டிருப்பது இதன் மற்ற குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள்.
ஐபேட் ஏர் வடிவத்தை சற்றே குறைத்து சில தரப்பினரைத் திருப்திப்படுத்தும் வகையில் ஐபேட் மினி 3 என்ற மற்றொரு ரக ஐபேட் கருவியையும் ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஐபேட் வகைகள் விரல் ரேகை மூலம் இயங்கும் தொடு திரையைக் கொண்டிருக்கும்.
ஐபேட் மினி 3 ரகத்தில் ஆப்பிள் புதிதாக பெரிய மாற்றங்கள் எதனையும் செய்யவில்லை. ஆனால் ஐபேட் ஏர் 2-இல் நிறைய மாற்றங்களைச் செய்திருக்கின்றது. இதன் மூலம் ஐபேட் ஏர் கருவியைத்தான் ஆப்பிள் விற்பனையில் முன் நிறுத்தும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
ஐபேட் மினி, ஐபேட் ஏர் ரகத்தைவிட 100 அமெரிக்க டாலர் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.
அதே வேளையில் கூடுதலாக 100 அமெரிக்க டாலர் செலுத்தி, ஐபேட் ஏர் 2 இன் கொள்ளிட வசதியை 64 கிகாபைட் என்ற அளவிற்கு விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
அழுக்குகள் – கீறல்கள் ஏற்படா வண்ணம் லேமினேட் எனப்படும் பாதுகாப்பு கவசத் தடுப்பை ஐபேட் கருவிகள் கொண்டிருக்கும் என்பதோடு, பிரதிபலிப்புகள் (anti-reflective laminated display) இல்லாத அளவுக்கு தெளிவாக எடுத்துக் காட்டக் கூடிய திரையையும் கொண்டிருக்கும்