ஹாங்காங், அக்டோபர் 17 – ஜனநாயக சீர்திருத்தத்தை முன்வைத்து ஹாங்காங்கில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், புகழ்பெற்ற ஊடக நிறுவனமான பிபிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை சீனா அரசு பல்வேறு காரணங்கள் கூறி முடக்கி உள்ளது.
சீனாவின் பிடியில் உள்ள ஹாங்காங்கில் ஜனநாயக ஆட்சி நடைபெற்று வந்தாலும், வேட்பாளர் நியமனம் உள்ளிட்ட அனைத்து உள்விவகாரங்களும் சீன அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. சீனா நியமனம் செய்யும் ஒருவரே ஹாங்காங்கில் நடைபெறும் தேர்தலுக்கான வேட்பாளராக இருக்க முடியும். இந்நிலையில், சுதந்திரமான ஜனநாயகம் கேட்டு மாணவர்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.
சீன அரசு, அவர்கள் மீது காவல்துறையினரைக் கொண்டு மிளகாய் பொடி தூவி, தடியால் கொடூரமாக தாக்கி அப்புறப்படுத்த முயன்று வருகின்றது. சீனாவின் இந்த அத்துமீறலை பிபிசி உள்பட பல்வேறு ஊடகங்கள் ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகின்றன. மேலும் கடந்த 28-ம் தேதி முதல் நடைபெறும் போராட்டங்கள் குறித்த தகவல்கள் வெளிநாட்டு ஊடகங்களில் முக்கிய இடங்களைப் பிடித்துள்ளன.
இதன் காரணமாக ஹாங்காங்கில் சீனாவின் அடக்குமுறைகள் மெல்ல மெல்ல வெளிவர ஆரம்பித்துள்ளது. இதனால் சீன அரசாங்கம், லண்டனை மையமாக கொண்டு உலகம் முழுவதும் வெளியாகிவரும் பிபிசி இணையதளத்தை சீனாவில் முடக்கியுள்ளது. இதேபோல் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ (The Newyork Times) இணையதளத்தையும், சீனா மொழியில் வெளியாகும் பிபிசி இணையளத்தையும் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பிபிசி குழுமத்தின் தலைவர் பீட்டர் ஹராக்கர்ஸ் கூறுகையில், “சீனாவின் இந்த அடக்குமுறை கண்டிக்கத்தக்கது. சுதந்திரமாக அணுகக்கூடிய செய்திகள் மற்றும் தகவல்களை முடக்க நினைக்கும் சீன அரசுக்கு எதிராக போராடுவோம்” என்று கூறியுள்ளார்.
இது குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹாங் லீ கூறுகையில், “சீனாவில் இணையத்திற்கு முழுமையான சுதந்திரம் உள்ளது. எனினும் சீன அரசு தேசிய பாதுகாப்பு கருதி, இணையதளங்களைக் சட்டப்படி நிர்வகித்து வருகின்றது” என்று கூறியுள்ளார்.