ஹாங்காங் : உலகம் முழுவதும் வங்கிகளில் இணையம் வழியாகப் பணத்தைக் கையாள்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக கொவிட்-19 முடக்கக் காலக் கட்டத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்க, இணையம் வழியாகவும், தானியங்கி இயந்திரங்களின் மூலமும்தான் தங்களின் வங்கிக் கணக்குகளை பயனர்கள் கையாண்டார்கள்.
ஆனால், ஹாங்காங் ஆளுநர் – அந்நாட்டின் தலைமைச் செயல் அதிகாரி – என்ற உயர்ந்த பதவியில் இருக்கும் கேரி லாம் வேறுவிதமான பிரச்சனையைத் தற்போது எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்.
ஹாங்காங்கில் சீன அரசாங்கம் கொண்டுவந்த பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா கேரி லாம்முக்கு எதிராக வங்கித் தடைகளை அறிவித்தது. அதைத் தொடர்ந்து பல வெளிநாட்டு வங்கிகளில் கேரி லாம் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
அதன் காரணமாக அவர் பணத்தை வங்கிகளில் செலுத்த முடியாமல், தற்போது எல்லா பண விவகாரங்களையும் ரொக்கப் பணத்தைக் கொண்டே கையாண்டு வருகிறார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா விதித்திருக்கும் தடைகள் காரணமாக அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட சொத்துகளையும் கேரி லாம் வாங்கவோ வைத்திருக்கவோ முடியாது.
அவருக்கு வங்கிக் கணக்குகள் தற்போது இல்லாததால் அல்லது இயக்க முடியாததால் அவருக்கு சம்பளமே ரொக்கமாகத்தான் வழங்கப்படுகிறதாம். இதை பேட்டியொன்றில் தெரிவித்திருக்கும் கேரி லாம், இப்போது என்வீட்டில் நிறைய ரொக்கப் பணம் இருக்கிறது எனவும் கூறியிருக்கிறார்.
கேரி லாம்முக்கு ஆண்டுக்கு 5.2 மில்லியன் ஹாங்காங் டாலர்கள் சம்பளமாக வழங்கப்படுகிறது. அதாவது மலேசிய ரிங்கிட் மதிப்பில் சுமார் 672,000 ரிங்கிட் அவருக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது.
இதில் பெரும்பகுதி தற்போது ரொக்கமாக வழங்கப்படுகிறது. சம்பளத்தின் மற்றொரு கணிசமான பகுதி ஹாங்காங் நிதியமைச்சின் கையிருப்பில் வைக்கப்படுகிறது.
இதிலிருந்து அமெரிக்கா வங்கித் தடைகளை விதித்தால் அதனால் எழுகின்ற பிரச்சனைகள் எத்தகைய பாதிப்புகளைக் கொண்டு வரும் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது ஹாங்காங் ஆளுநரான கேரி லாம்முக்கு ஏற்பட்டிருக்கிற நிலைமை!