Home உலகம் சுவிப்ஃட் (SWIFT) வங்கிப் பரிமாற்றத் தடையால் ரஷ்யா முடக்கப்படுமா?

சுவிப்ஃட் (SWIFT) வங்கிப் பரிமாற்றத் தடையால் ரஷ்யா முடக்கப்படுமா?

999
0
SHARE
Ad

(ரஷியா-உக்ரேன் போரைத் தொடர்ந்து, அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளால் சுவிப்ஃட் (SWIFT) என்ற பெயர் பிரபலமாகியிருக்கிறது. சுவிப்ஃட் என்பது என்ன? அதன் மூலம் ரஷியாவுக்கு விதிக்கப்படும் வங்கிப் பரிமாற்றத் தடையால் அந்நாடு முடக்கப்படுமா? விவரிக்கிறார் இரா. முத்தரசன்)

*** சுவிப்ஃட் என்பது என்ன?

*** வங்கிகள் அதனை ஏன் பயன்படுத்துகின்றன?

#TamilSchoolmychoice

*** சுவிப்ஃட் வங்கிப் பரிமாற்றத் தடை ரஷ்யாவை எப்படிப் பாதிக்கும்?

*** தடைகளால் மற்ற நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுமா?

நமது மலேசிய இந்திய மாணவர்களில் பலர் ரஷ்யாவில் மருத்துவம் பயின்று இன்று
மருத்துவர்களாகப் பணிபுரிகிறார்கள். உங்களின் மகனோ, மகளோ ரஷ்யாவில்
மருத்துவம் படிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

அவர்களுக்குக் கல்விக் கட்டணமாகவோ, செலவுகளுக்காகவோ வங்கி மூலமாக பணம் அனுப்புகிறீர்கள். இங்குள்ள சிஐஎம்பி, மே பேங்க் போன்ற உள்நாட்டு
வங்கிகளில் ஏதாவது ஒன்றுக்குச் சென்று ரஷ்யாவிலுள்ள உங்கள் பிள்ளைக்குப்
பணம் அனுப்புவதற்காகப் பாரம் ஒன்றைப் பூர்த்தி செய்கின்றீர்கள்.

அந்தப் பாரத்தில் உங்கள் பிள்ளையின் வங்கிக் கணக்கு விவரங்களைக்
குறிப்பிடுகிறீர்கள். அவர் ரஷ்யாவில் கணக்கு வைத்திருக்கும் அந்த
வங்கியின் சுவிப்ஃட் கணக்கு என்ன என்றும் அந்தப் பாரத்தில்
குறிப்பிடுவீர்கள். அந்த எண்ணை தன் வங்கிக் கணக்கு விவரங்களுடன் இணைத்து
உங்கள் பிள்ளை உங்களுக்கு அனுப்பியிருப்பார். நீங்களும் அது ஏன், எதற்கு
என்று தெரியாமல் பாரத்தில் பூர்த்தி செய்து வங்கி அதிகாரியிடம்
கொடுப்பீர்கள்.

உரிய பணத்தைக் கொடுத்தவுடன் அடுத்த சில நாட்களில் உங்கள் பிள்ளைக்கு
வங்கிக் கணக்கில் பணம் போய் சேர்ந்துவிடும்.

நாமெல்லாம் இவ்வாறு வங்கிகளின் வழி அயல்நாட்டுக்குப் பணம் அனுப்பும்
போதெல்லாம், நம்மையும் அறியாமல் சுவிப்ஃட் எண்ணைக் குறிப்பிட்டு பணத்தை
அனுப்பிக் கொண்டிருந்தோம்.

ரஷிய அதிபர் – விளாடிமிர் புடின்

ஆனால் இன்று நீங்கள் வழக்கமாகச் செய்வதுபோல் ரஷ்யாவுக்கு பணம் அனுப்ப
வங்கிக்குள் நுழைந்தால் வங்கி அதிகாரியோ ரஷ்யாவுக்குப் பணம் அனுப்ப
முடியாது எனக் கூறிவிடுவார். ரஷ்ய நாட்டு வங்கிகளுக்கான சுவிப்ஃட்
பரிமாற்றங்கள் முடக்கப்பட்டுவிட்டன எனவும் அந்த அதிகாரி உங்களிடம்
தெரிவிப்பார்.

இனி ரஷ்யாவில் உள்ள உங்கள் பிள்ளைக்கு எப்படி பணம் அனுப்புவீர்கள்?

இப்படித்தான் தொடங்குகிறது, உக்ரெய்ன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால்
வங்கிகளுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய நெருக்கடிகளும் பாதிப்பும்!

சுவிஃட் என்றால் என்ன?

இந்த சுவிப்ஃட் பணம் அனுப்பும் நடைமுறை 1973ஆம் ஆண்டு பெல்ஜியம் தலைநகர்
பிரசெல்ஸில் தோற்றுவிக்கப்பட்டது. முதல்கட்டமாக 15 நாடுகளில் உள்ள 239
வங்கிகள் இந்தத் திட்டத்தில் இணைந்தன. இதற்கு முன்னால் வங்கிகள் மூலமாக
பணப் பரிமாற்றம் செய்யப்படும்போது டெலெக்ஸ் எனப்படும் சாதனம் மூலம்
தகவல்கள் பரிமாறப்பட்டன.

நாளடைவில் கணினி வளர்ச்சியைத் தொடர்ந்து ஒரு நாட்டில் இருந்து இன்னொரு
நாட்டிற்குப் பணம் அனுப்பும்போது இந்த சுவிப்ஃட் எண் வழியாகப்
பரிமாற்றங்கள் நடைபெற்றன. இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள 11,000 நிதி
அமைப்புகள் இந்த சுவிஃட் எனப்படும் நடைமுறை மூலம் பணப் பரிமாற்றம்
செய்கின்றன. அதன்வழி நாள் ஒன்றுக்கு சுமார் 35 மில்லியன் எண்ணிக்கையிலான பணப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.

The Society for Worlwide Interbank Financial institutions என்ற அமைப்பின் பெயரில் உள்ள முதல் எழுத்துகளைக் கொண்டு அழைக்கப்படுவதுதான் சுவிஃட். “அனைத்துலக நிதி மையங்களுக்கு இடையிலான வங்கிப் பரிமாற்றத்திற்கான  இயக்கம்” என்பதுதான் இதன் பொருள்

உக்ரெய்ன் மீதான ரஷ்யப் போரைத் தொடர்ந்து முதல்கட்டமாக அமெரிக்காவும்
ஐரோப்பிய நாடுகளும் அறிவித்த பொருளாதாரத் தடைகளில் முக்கியமானது ரஷ்யாவை இந்த சுவிஃட் எனப்படும் பரிமாற்றத் திட்டத்தில் இருந்து உடனடியாக
அகற்றியதுதான்.

பொருளாதாரத் தடை என்று வரும்போது ஒரு நாட்டின் மீது அணுகுண்டு ஒன்றை
வீசுவதுபோன்ற தாக்குதல் இதுவாகும்.

மேலே நாம் சொன்ன உதாரணம் போன்று இன்றைக்கு ரஷ்யாவில் படிக்கும்
மாணவர்களுக்கு மற்ற நாடுகளில் இருந்து பெற்றோர் பணம் அனுப்ப முடியாமல்
தவித்து வருகின்றனர்.

இன்னோர் உதாரணமாகப் பார்த்தால் நீங்கள் ஒரு வணிகராக இருந்து சில பொருட்களை ரஷ்யாவுக்கு அனுப்பியிருந்தால் அதற்கான பணத்தை
ரஷ்யாவிலுள்ள நிறுவனம் இப்போதைக்கு உங்களுக்கு நேரடியாக வங்கி மூலம்
அனுப்ப முடியாது.

உங்களுக்குப் பணம் எப்போது வரும் என்பதையும் யாரும் இப்போதைக்கு உறுதிகூற
முடியாது. கால ஓட்டத்தில் இந்த சுவிப்ஃட் நடைமுறையில் இருந்து ரஷ்ய
வங்கிகள் அகற்றப்படும் ஒரு முடிவினால் மட்டுமே பலமுனைகளிலும் பொருளாதார
ரீதியாக ரஷ்யாவுக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

வணிகப் பரிமாற்றங்கள், வங்கிப் பரிமாற்றங்கள் என எண்ணிலடங்காத நிதிப்
பரிமாற்றங்களை ரஷ்யா செயல்படுத்த முடியாமல் திகைத்து நிற்கிறது. இதனால்
அதன் பொருளாதாரம் சுமார் 5 விழுக்காடு சுருங்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் நாணய மதிப்பு அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது சுமார் 30 விழுக்காடு வீழ்ச்சியடைந்திருக்கிறது.

ரஷியா மட்டுமல்ல – மற்ற நாடுகளுக்கும் பாதிப்பு

பொருளாதாரப் பாதிப்பு என்பது ரஷ்யாவுக்கு மட்டும் இருக்கப்போவதில்லை.
ரஷ்யாவுடன் வணிகங்கள் புரியும் பல உலக நாடுகள் இதனால் தங்களுக்குரிய
பணத்தைப் பெற முடியாமல் சிக்கலில் அவதியுறுவார்கள்.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய், எரிவாயு போன்றவை ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் அந்தப் பொருட்களையும் இனி ரஷ்யா அனுப்ப முடியாது. அனுப்பிய பொருட்களுக்கும் வங்கிகளின் மூலம் பணத்தைப் பெற முடியாது.

ரஷ்யாவின் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்த நாடுகளும் இனி அத்தகைய
பொருட்களைப் பெற மாற்று வழிகளைத் தேட வேண்டியிருக்கும். உதாரணமாக
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய், எரிவாயு வாங்கிக்கொண்டிருந்த ஐரோப்பிய
நாடுகள் இனி வேறு நாடுகளைத் தேடிச் செல்ல வேண்டும். எண்ணெய் விலை
மீண்டும் உயரலாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

பெல்ஜியத்தைத் தலைமையகமாகக் கொண்ட சுவிப்ஃட் 

சுவிப்ஃட் எனும் அமைப்பு 25 பேர் கொண்ட நிர்வாக வாரியத்தால் இன்றும்
பெல்ஜியத்தில் இருந்து நடத்தப்படுகிறது. இதற்கு முன்னர் 2012-ஆம் ஆண்டு
ஈரானிய வங்கிகள் மீது இதேபோன்ற சுவிப்ஃட் பொருளாதாரத் தடைகள்
செயல்படுத்தப்பட்டன.

ஈரான் அணுவாயுதத் தயாரிப்பில் ஈடுபட்டதால் இந்தத் தடைகள் கொண்டு வரப்பட்டன. அதன் காரணமாக ஈரானின் ஏற்றுமதி வருமானம் பாதியாகக்
குறைந்தது. அதன் அனைத்துலக வணிகம் 30 விழுக்காடு சரிந்தது.

ஈரான் சிறிய நாடு. அதனால் அதன் பாதிப்பு அவ்வளவாக வெளியே தெரியவில்லை.
ஆனால், ரஷ்யாவின் நிலைமை அப்படியல்ல. இத்தகைய பொருளாதாரத் தடைகள் இன்னும் கூடிக்கொண்டே போகுமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை.

இதேபோன்ற சில பொருளாதாரத் தடைகளை 2014ஆம் ஆண்டிலேயே ரஷ்யா
எதிர்நோக்கியது. அவ்வாண்டில் உக்ரெய்னுக்குச் சொந்தமான கிரிமியா
தீபகற்பத்தை ஆக்கிரமித்த காரணத்தால் ரஷ்யா மீது தடைகள்
அமல்படுத்தப்பட்டன.

அந்தச் சமயத்தில் SPFS என்னும் புதிய பணப் பரிமாற்றத் திட்டத்தை சுவிஃட்
நடைமுறைக்குப் பதிலாக ரஷ்யாவின் மத்திய வங்கி அமல்படுத்தியது. இதனைத்
தற்போது சுமார் 400 பயனீட்டாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இருந்தாலும் சுவிஃட் நடைமுறைக்கு இணையான ஒன்றல்ல இந்தத் திட்டம்.

இப்போதுகூட சீனாவுடன் இணைந்து புதிய பணப் பரிமாற்றத் திட்டத்தைச் செயல்படுத்த ரஷியா திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சீனா எந்த அளவுக்கு – தங்களின் முக்கிய வணிகப் பங்காளிகளான அமெரிக்கா-ஐரோப்பிய நாடுகளைப் புறக்கணித்து விட்டு – ரஷியாவுடன் இணைந்து இதுபோன்ற வங்கிப் பரிமாற்றத் திட்டத்தில் செயல்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா
போன்ற நாடுகள் விதித்திருக்கும் விரிவான பொருளாதாரத் தடைகளில் ஒரு சிறிய
அங்கம்தான் இந்த சுவிஃட் பரிமாற்றம் மீதான தடை.

ஆனால் இது தொடர்ந்தால் ரஷ்யா மேலும் மோசமாக முடக்கப்படும். அதிலிருந்து
எப்படி மீண்டு வரப்போகிறது என்பதை காலப்போக்கில்தான் நாம் தெரிந்து கொள்ள
முடியும்.

-இரா.முத்தரசன்