குப்பர்ட்டினோ (அமெரிக்கா) – ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அல்லது மேம்படுத்த சாதனங்கள் எப்போதும் முன்கூட்டிய அறிவிப்புகளுடனும், பிரம்மாண்டமான அறிமுகக் கூட்டங்களில் வழியும்தான் சந்தைக்கு வருவதற்கு முன் அறிமுகம் காணும்.
ஆனால், தற்போது உலகம் முழுவதும் கொவிட்-19 பாதிப்புகள் நிலவி வருகின்றன காரணத்தினாலோ என்னவோ, எந்தவித ஆரவாரங்களும், பிரம்மாண்டமான கூட்டங்களும், முன்கூட்டிய அறிவிப்புகளும் இன்றி தனது புதிய சாதனங்களாக ஐபேட் புரோ, மேக்புக் ஏர் கணினி ஆகியவற்றை ஆப்பிள் வெளியிட்டுள்ளது.
ஐபேட் புரோ
ஐபேட் எனப்படும் தட்டைக் கணினிகள் சந்தையில் இன்னும் கோலோச்சி வரும் ஆப்பிளின் ஐபேட்டின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக, அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்திருக்கிறது.
A12Z என்றழைக்கப்படும் பையோனிக் சிப் எனப்படும் நுண்ணிய உள்ளடக்கத் தகடுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது புதிய ஐபேச் புரோ. அதன் புதிய, மேம்படுத்தப்பட்ட, அதிநவீன தொழில் நுட்ப அம்சங்களினால் கூடுதல் அறிவுத் திறனுடன் செயல்படும் ஆற்றல், நீண்டகாலம் தாக்குப்பிடிக்கக் கூடிய மின்கலம், வலிமையான தொடர்புத் திறன் ஆகியவற்றை புதிய ஐபேட் புரோ கொண்டிருக்கிறது.
12 மெகாபிக்சல் திறன்கொண்ட அகல (12-megapixel Wide camera) கேமராவையும் கூடுதலாக 10 மெகாபிக்சல் கொண்ட இரண்டாவது கேமராவையும் (10-megapixel Ultra Wide camera) ஐபேட் புரோ கொண்டிருக்கிறது.
மேஜிக் கீபோர்ட் (Magic Keyboard) என்ற புதிய விசைப் பலகையையும் ஐபேட்டுடன் இணைத்துப் பயன்படுத்த ஆப்பிள் வெளியிட்டிருக்கிறது.
மேலும் பல புதிய அம்சங்களையும் கொண்டிருக்கிறது ஆப்பிளின் ஐபேட் புரோ.
புதிய ஐபேட் புரோ சாதனத்தின் விலை 799 அமெரிக்க டாலர்களில் இருந்து தொடங்குகிறது.
மேஜிக் கீபோர்ட் எதிர்வரும் மே மாதத்தில் இருந்து விற்பனைக்கு வரும். இதன் விலை 299 அமெரிக்க டாலர்களில் இருந்து தொடங்குகிறது.
மேக்புக் ஏர் கணினி
புதிய மேக்புக் ஏர் கணினி 999 அமெரிக்க டாலர் விலையில் (மலேசிய ரிங்கிட் 4,369) தொடங்கி 1,000 அமெரிக்க டாலருக்கும் கூடுதலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. முந்தைய விலையை விட இது குறைவு என்பது வாங்க விரும்புபவர்களுக்கான இனிப்பான செய்தியாகும்.
முன்பிருந்த கணினிகளை விட அதிக வேகத் திறன் கொண்டது புதிய மேக்புக் ஏர் ஆகும்.
256 ஜிபி (256GB) கொள்அளவு தொடங்கி, 2 டெராபைட் (2TB) கொள் அளவு வரை மேக்புக் ஏர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மேக்புக் ஏர் கணினியின் விலை 999 அமெரிக்க டாலர்களில் இருந்து தொடங்குகிறது.