Home அவசியம் படிக்க வேண்டியவை ஸ்டாலினின் “லோக் ஆயுக்தா” பிரச்சாரம் வெற்று அறிக்கையா? வெற்றி அறிக்கையா?

ஸ்டாலினின் “லோக் ஆயுக்தா” பிரச்சாரம் வெற்று அறிக்கையா? வெற்றி அறிக்கையா?

934
0
SHARE
Ad

stalin1_350__சென்னை – தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக பொருளாளர் ஸ்டாலின் இப்போதே மக்களை சந்திக்க ஆரம்பித்துவிட்டார்.  ‘நமக்கு நாமே’ என்ற பயணத்தை நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் துவக்கிய அவர், பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்களை சந்தித்து வருகிறார்.

அப்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் கருங்கல் பகுதிக்கு சென்ற அவர் மாணவ-மாணவியரை சந்தித்து உரையாடினார். அப்போது மாணவர்கள், “லஞ்சம், ஊழல் அதிகரித்துவிட்டது. இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்” என கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஸ்டாலின் கூறிய பதில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அவர், “ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், ஊழல் இல்லாத நிர்வாகம் அமைக்க ‘லோக் ஆயுக்தா’ நீதிமன்றம் ஏற்படுத்தப்படும்” என்று கூறினார்.

#TamilSchoolmychoice

திமுக ஆட்சிக்கு வந்தால், மது முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பினை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்த போது எப்படி ஒரு ஆச்சரிய அலை ஏற்பட்டதோ, அதேபோன்ற ஒரு ஆச்சரிய அலை , லோக் ஆயுக்தா குறித்து ஸ்டாலின்  கூறியதும் ஏற்பட்டுள்ளது.

Stalin_380‘லோக் ஆயுக்தா’ என்ற பெயர் சமீபத்தில் தோன்றியதில்லை. 1969-ம் ஆண்டு மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்த ஆணையம், தனது பரிந்துரையில் உடனடியாக மத்திய அரசின் செயல்பாட்டில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். மாநிலங்களின் செயல்பாடுகளில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த ‘லோக் ஆயுத்தா’ குழுக்கள் ஏற்படுத்த வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்தது. இந்த பரிந்துரையின் பேரில் மத்தியில் அப்போது ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு 1969-ல் பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்தது.

எனினும், பாராளுமன்றத்தின் மேல்சபையில் இந்த மசோதாவிற்கு போதிய ஆதரவு இல்லாத காரணத்தினால் இம்மசோதா காலாவதியாகிவிட்டது. ஆனாலும் கூட அன்னா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து இம்மசோதா கொண்டு வர வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களினால் மத்திய அரசு 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2005, 2008 ஆகிய வருடங்களில் பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதாவை தொடர்ந்து தாக்கல் செய்தது. இத்தனை ஆண்டுகளில், பலமுறை இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும், ஒருமுறை கூட ஏன் சட்டமாக்கப்படவில்லை என்பது இன்றும் புரியாத புதிராகவே உள்ளது.

வழக்கமாக ஒரு மசோதா ஆளும்கட்சிக்கு பிடிக்கவில்லை என்றால் எதிர்கட்சி அதனை ஏற்றுக் 34568_L_karunanidhi-stalinகொள்ளும். எதிர்கட்சிக்குப் பிடிக்கவில்லை என்றால் ஆளும் கட்சிக்குப் பிடிக்கும். ஆனால், இந்த மசோதாவை மட்டும் சொல்லிவைத்தார் போல், பெரும்பாலான கட்சிகள் கடுமையாக எதிர்கின்றன. இதற்கு திமுகவும் – அதிமுகவும் விதிவிலக்கல்ல.

பல்வேறு விவகாரங்களில் தன்முனைப்புடன் அறிக்கை வெளியிடும் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக பெரிதாக வாய்திறந்தது இல்லை. இத்தனை வருடங்கள் மாறி மாறி ஆட்சி செய்த பின்பும், லோக் ஆயுக்தாவை நிறைவேற்றாமல் மௌனம் சாதித்து வருகின்றனர். இதற்கு இரு கட்சிகளும் பல்வேறு காரணங்களை கூறி வந்தாலும், இதற்கு மிக முக்கியக் காரணமாக பார்க்கப்படுவது லோக் ஆயுக்தாவின் அடிப்படை அம்சம் தான்.

முதல்வராக இருந்தாலும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மாநில ஆளுநர் அனுமதியில்லாமல் வழக்குத் தொடரலாம் என்பது தான் அந்த முக்கிய அம்சம். ஒருவேளை, இந்த லோக் ஆயுக்தா திமுக-அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டு இருந்தால், இரு கட்சிகளின் ஆணி வேர்கள் எப்போதோ ஆட்டம் கண்டு இருக்கும்.

இப்படி லோக் ஆயுக்தா விவகாரத்தில், இதுவரை எந்தவொரு நிலைப்பாட்டையும் திமுக எடுக்காமல் இருப்பதால், ஸ்டாலினின் இந்த அறிக்கை வெறும் தேர்தல் அறிவிப்பாகவே பார்க்க வேண்டியுள்ளது.

– சுரேஷ்