கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் ஆட்சியாளர்கள் தலையிடுகிறார்கள் என்றால், நிச்சயமாக அதில் மிகப் பெரிய பிரச்சனை உள்ளது. எனவே அவர்கள் சொல்வதைக் காது கொடுத்து கேளுங்கள் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு, முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1எம்டிபி விவகாரத்தில் சுல்தான்கள் கருத்துத் தெரிவித்திருப்பது அதில் உள்ள மிகப் பெரிய பிரச்சனையைக் காட்டுகிறது. இந்த விவகாரத்தால் நாட்டிற்கும், மக்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று அவர்கள் கருதுகின்றனர்”
“சுல்தான்களின் இந்த உத்தரவை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் தலைவராகிய பிரதமரின் கடமை. எனவே இந்த விவகாரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு அவரின் தோள்களின் மேல் வைக்கப்படுகின்றது” என்று மொகிதின் தெரிவித்துள்ளார்.
1எம்டிபி விவகாரத்தில் விசாரணையைத் தீவிரப் படுத்தி அரசாங்கம் உடனடியாக அதற்குத் தீர்வு காண்பதோடு, அதில் உண்மை இருப்பின் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலாய் ஆட்சியாளர்கள் சார்பில் நேற்று அறிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.