Home Featured நாடு மக்களின் புத்திக்கூர்மையை இழிவுபடுத்தும் 1எம்டிபி: ஷாபி அப்டால் கண்டனம்

மக்களின் புத்திக்கூர்மையை இழிவுபடுத்தும் 1எம்டிபி: ஷாபி அப்டால் கண்டனம்

519
0
SHARE
Ad

Minister Datuk Seri Mohd Shafie Apdalகோலாலம்பூர்- மக்கள் அக்கறையுடன் எழுப்பியுள்ள பல்வேறு கேள்விகளுக்கு 1எம்டிபி உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று அம்னோ உதவித் தலைவர் ஷாபி அப்டால் தெரிவித்துள்ளார். இத்தகைய செயல்பாட்டின் மூலம் மக்களின் புத்திக்கூர்மையை அந்நிறுவனம் இழிவுபடுத்தி விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

பினாங்கு மற்றும் போர்ட் கிள்ளானில் 1எம்டிபி நிலங்களை வாங்கியதால் அந்நிறுவனத்துக்கு எந்தவித ஆதாயமும் இல்லை என்று சுட்டிக்காட்டிய அவர், பல பில்லியன் டாலர்கள் மூன்றாவது தரப்பின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டது தொடர்பிலும் அந்நிறுவனம் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றார்.

“1எம்டிபிக்கு உள்ள கடன்களை விட அதன் சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது எனும் ஒரே விளக்கத்தையே தொடர்ந்து அளித்து வருகிறார்கள். இது உண்மையில் மலேசியர்களின் புத்திக்கூர்மையை இழிவுபடுத்தும் செயல்” என்று முன்னாள் புறநகர் வளர்ச்சித்துறை அமைச்சரான ஷாபி கூறினார்.

#TamilSchoolmychoice

வெளிப்படைத்தன்மை, சிறந்த நிர்வாகம் ஆகியவை இல்லாத காரணத்தால் மலேசியா பெரும் இழப்புகளைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், மலாய் ஆட்சியாளர்கள் விடுத்த அறிக்கையைத் தானும் ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

“1எம்டிபி விவகாரம் தொடர்பில் அம்னோ துணைத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் வெளியிட்ட கருத்துக்களை ஆதரிக்கிறேன். பேங்க் நெகாரா ஆளுநர் 1எம்டிபி விவகாரம் குறித்த விசாரணையை வேகப்படுத்தி இருப்பதால், இந்த விவகாரத்தை பின்னிறுத்தி விட்டு, மலேசிய மக்கள் மற்றும் அனைத்துலக சமுதாயத்தின் ஆதரவைப் பெறுவதில் நாம் கவனம் செலுத்தலாம்” என்று ஷாபி மேலும் கூறியுள்ளார்.