அந்த நிகழ்ச்சிக்கு நேரடியாக வருகை தந்த மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு, அடுத்த தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட சரவணனுக்குத் தனது ஆதரவை வழங்குவதாகவும் சாமிவேலு அறிவித்தார்.
“கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் நான் போட்டியிட வேண்டுமென்று விரும்புகின்றார்கள். இந்திய சமுதாயத்திற்கான திட்டங்களை மேற்கொண்டுள்ள கட்சியின் தேசியத் தலைவருக்கு நான் உறுதுணையாக நிற்க வேண்டுமென கட்சியில் விரும்புகின்றார்கள். நான் வெற்றி பெற முடியும் எனக் கருதுகின்றேன்” என்றும் விளையாட்டுத் துறை துணையமைச்சருமான சரவணன் தெரிவித்தார்.
திடீரென தேவமணி தனக்கு எதிராகப் போட்டியில் குதிப்பார் என்பதை சரவணன் சற்றும் எதிர்பார்க்கவில்லை என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அதன் காரணமாக, கட்சியில் தனக்கு தொகுதித் தலைவர்கள் மற்றும் தேசிய நிலையில் உள்ள தலைவர்களின் ஆதரவு உள்ளது என்பதைக் காட்டுவதற்காக, இன்றைய கூட்டம் அவரது ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிகின்றது.
இன்றைய கூட்டத்தில் இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி தலைவர்களும் கலந்து கொண்டு தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று ஈப்போவில் தேசியத் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி அறிவித்திருந்தார்.
47 வயதான சரவணனுக்கு, தொகுதித் தலைவர்கள் மத்தியில் ஆதரவு அதிகம் இருப்பதாக மஇகா பார்வையாளர்கள் கருதுகின்றனர். “நாங்கள் இருவருமே தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தின் ஆதரவாளர்கள். எங்களுக்கிடையில் ஓர் ஆரோக்கியமான போட்டியை நாங்கள் வழங்குவோம். எங்களில் சிறந்தவரைப் பேராளர்கள் தேர்ந்தெடுக்கட்டும்” என சரவணன் இந்தப் போட்டி பற்றி கருத்துரைத்துள்ளார்.
மஇகா பேராளர்களுடனும், மற்ற தலைவர்களுடனும் அணுக்கமான தொடர்புகளை வைத்துக் கொள்வதிலும், இயல்பாகப் பழகுவதிலும் சரவணன் மஇகாவினரிடத்தில் பிரபலமாகத் திகழ்கின்றார்.
இருப்பினும், அவருக்கு தேவமணி கடுமையானப் போட்டியை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் தனக்கு கடந்த காலங்களில் இருந்த தொடர்புகளின் மூலம், கட்சியில் கணிசமான ஆதரவைத் திரட்ட முடியும் என தேவமணியும் அவரது ஆதரவாளர்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா இரு தரப்புக்கும் ஆதரவு தராமல் நடுநிலைமை வகிப்பதால், சுப்ரா ஆதரவாளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரணத்தால், தேர்தல் நெருங்க, நெருங்க பிரச்சாரங்கள் சூடு பிடித்து, போட்டி கடுமையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.