மலாக்கா- கடந்த திங்கட்கிழமை ‘கபாலி’ படப்பிடிப்புக்காக கோலாலம்பூர் வந்தடைந்த ரஜினிகாந்த் நேற்று படப்பிடிப்பு நடக்கப் போகும் மலாக்கா நகருக்கு சென்று சேர்ந்தார்.
அங்கு அவருக்கு மலாக்கா ஆளுநர் துன் முகமட் கலில் யாக்கோப் வரவேற்பு அளித்து உபசரித்தார்.
மலாக்கா ஆளுநர் – அவரது அதிகாரிகளுடன் ரஜினிகாந்த் – மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ எம்.மகாதேவன்
தனது தீவிர ரசிகரான மலாக்கா ஆளுநரை மரியாதை நிமித்தம் நேரில் சந்தித்துள்ளது குறித்து ரஜினியும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தமிழ், இந்திப் படங்களின் தீவிர இரசிகரான மலாக்கா ஆளுநர்தான் நடிகர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாரவிக்கு டத்தோ பட்டம் வழங்கியவர் – நடிகர் ஷாருக்கானுக்கும் டத்தோ பட்டம் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக மலேசியா வந்துள்ள அப்படத்தின் நாயகன் ரஜினி, ஆளுநர் துன் முகமட் கலில் யோக்கோபின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமையன்று அவரைச் சந்தித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் முகமட் கலில் யோக்கோப், ரஜினியை நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறை என்றார்.
“ஏற்கெனவே ஒருமுறை அவரை (ரஜினி) விமானத்தில் சந்தித்துள்ளேன். ஆனால் அந்த சிறந்த மனிதருடன் முகத்துக்கு முகம் கொடுத்து, நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறை. கடந்த 1990களில் ‘முத்து’ படம் வெளியானது முதல், நான் அவரது தீவிர ரசிகராகவும், தமிழ்ச் சினிமா ரசிகராகவும் இருந்து வருகிறேன்,” என்றார் முகமட் கலில் யோக்கோப்.
உணர்வுப்பூர்வமான, யதார்த்தமான அம்சங்களைக் கொண்ட தென்னிந்திய மொழிப் படங்களை தாம் ஆர்வத்துடன் பார்த்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், ரஜினியை நேரில் சந்தித்தது தமக்கு பெரும் உற்சாகத்தை அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற பல்வேறு தமிழ்த் திரையுலக விழாக்களில் தாம் கலந்து கொண்டிருப்பதாகவும் ஆளுநர் மேலும் கூறினார்.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை வரை மட்டுமே ரஜினி மலாக்காவில் இருப்பார் எனக் கூறப்படுகிறது. மலாக்காவில் ‘கபாலி’ படப்பிடிப்பு நடந்து வருகிறது.