புதுடெல்லி- பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக தற்போது நிலவி வரும் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் தாம் நாளை பயணம் மேற்கொள்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் விரிவாகப் பதிவிட்டுள்ளார். அதில், கிழக்காசிய நாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் மலேசியாவுக்கும், வர்த்தக முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூருக்கும் தாம் பயணம் மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
“கடந்த 2010 முதற்கொண்டே மலேசியாவுடன் வியூக ரீதியிலான தொடர்புகளைக் கொண்டிருக்கிறது இந்தியா. பல்வேறு கட்டமைப்புத் திட்டங்கள் தொடர்பில் இந்தியாவில் மிக வலுவான முதலீடுகளைச் செய்துள்ளது மலேசியா. அதேபோல் மலேசியாவுடனான இந்தியாவின் துடிப்பான வர்த்தகமும் குறிப்பிடத்தக்கது” என மோடி குறிப்பிட்டுள்ளார்.
“இருதரப்பு உறவுகள் தொடர்பில் மலேசியப் பிரதமருடன் விவாதிக்க உள்ளேன். மேலும் தோரண வாயில் திறப்பு விழாவில் பங்கேற்பதுடன், மலேசிய பெரு நிறுவனங்களுடனும் (கார்ப்பரேட்) ஆலோசிக்க உள்ளேன். மலேசிய ராமகிருஷ்ணா மடத்துக்குச் செல்வதும் அங்கு, சுவாமி விவேகானந்தரின் சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்பதும், பத்துமலை கோவிலுக்குச் செல்வதும் என் பயணத் திட்டத்தில் உள்ளது.” என தனது மலேசியப் பயணத் திட்டங்கள் குறித்தும் மோடி விவரித்துள்ளார்.
“மலேசியாவில் ஏறத்தாழ 2 மில்லியன் இந்திய வம்சாவளியினர் உள்ளனர். அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றும் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான உறவை ஏற்படுத்தியமைக்காக புலம்பெயர் இந்தியர்களுக்கு நாம் தலைவணங்க வேண்டும். கலந்துரையாடல் தொடர்பான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். லண்டனில் உள்ள வெம்ப்ளி அரங்கில் நடத்தப்பட்ட சமூக சந்திப்பு கூட்டத்திற்கு இதே போன்று நான் விடுத்த கோரிக்கைக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அது அருமையான அனுபவமாக அமைந்தது” என்று மோடி மேலும் தெரிவித்துள்ளார்.
சிறந்த ஆலோசனைகளை வழங்குபவர்களை மலேசியாவில் நேரடியாகச் சந்திக்கவிருப்பதாகவும் மோடி தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.