கண்டஹார் (ஆப்கானிஸ்தான்) – மிகவும் பாதுகாப்பு மிகுந்த ஆப்கானிஸ்தானின் தென் பகுதி நகரான கண்டஹாரிலுள்ள விமான நிலைய வளாகத்தின் மீது தலிபான் போராளிகள் மூர்க்கத்தனமான தாக்குதல்களை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தொடுத்தனர்.
அரசாங்க ஊழியர்கள் வசிக்கும் பகுதிகளின் மீதும், ஆப்கான், மற்றும் அமெரிக்க, நேட்டோ படைகள் பயன்படுத்தும் இராணுவத் தளங்கள் மீதும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்தத் தாக்குதலில் இதுவரை பயங்கரவாதிகள் உட்பட 10 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
24 மணி நேரத்தில் கண்டஹாரில் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும். திங்கட்கிழமை இரவு ஒரு போலீஸ் நிலையத்தின் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்து, நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அடுத்த நாளே, அதாவது நேற்றிரவு, கண்டஹார் விமான நிலைய வளாகத்தில் இவர்கள் தாக்குதல் தொடுத்துள்ளனர். மிகுந்த பாதுகாப்பு அரண்களைக் கொண்ட இராணுவத் தளங்களின் ஊடே தாக்குதல்காரர்களால் எவ்வாறு ஊடுருவி உள்ளே நுழைய முடிந்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.