கோலாலம்பூர் – நியூசிலாந்தின் முக்கிய நகரமான ஆக்லாந்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை, கோலாலம்பூர் நோக்கி சென்ற மலேசியா ஏர்லைன்சின் எம்எச் 132 விமானம், சரியான பாதையை விடுத்து, தவறான பாதையில் சென்றுள்ளது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எம்எச் 132 கடந்த வெள்ளிக் கிழமை, ஆக்லாந்து விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 8-வது நிமிடத்தில் தான், விமானம் தவறான பாதையில் செல்வதை விமானி உணர்ந்துள்ளார். கோலாலம்பூர் செல்ல வேண்டிய விமானம், தவறாக மெல்போர்ன் வழித்தடத்திற்கு திரும்பி உள்ளது.
விமானத்தின் பாதை மாறியதை உணர்ந்த விமானி, உடனடியாக விமானக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவர், விமானத்தை மீண்டும் மலேசியாவிற்கு திருப்பி உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, நியூசிலாந்தின் விமான சேவைப் போக்குவரத்து அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஏர்லைன்ஸ் எங்களிடம் அளித்த விமானத் திட்டத்திலும் (Flight Plan), விமானியிடம் அளிக்கப்பட விமானத் திட்டத்திலும் வேறுபாடு ஏற்பட்டு இருந்ததனால், விமானம் தவறான பாதையில் சென்றது. உடனடியாக நாங்கள் விமானியைத் தொடர்பு கொண்டு, சரியான விமானத் திட்டத்தை ஒப்பிட்டுக் கொண்டோம். அதன் பிறகு விமானம், மலேசியா செல்லும் பாதையில் திரும்பியது” என்று கூறியுள்ளார்.
தகவல் தொடர்புபினால் ஏற்பட்ட இந்த பிரச்சனை, சரி செய்யப்பட்டு இருந்தாலும், எம்எச் 370, எம்எச் 17 எனப் பெரிய பேரிடர்களை சந்தித்து மீண்டு எழுந்துள்ள மலேசியா ஏர்லைன்ஸ், தொடர்ந்து இது போன்ற பிரச்சனைகளில் சிக்கி வருவது, அந்நிறுவனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.