கள்ளக்குறிச்சி – எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், திடுக்கிடும் திருப்பமாக அந்த மாணவிகள் மூவரும் படுகொலை செய்யப்பட்டதாக, அக்கல்லூரியின் தாளாளர் வாசுகி திடுக்கிடும் வாக்குமூலம் ஒன்றை அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
சென்னை தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சமீபத்தில் சரண் அடைந்த கல்லூரித் தாளாளர் வாசுகியை, நேற்று கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதியிடம், வாசுகி அளித்த வாக்குமூலத்தில், “இந்த வழக்கில் காவல்துறையினர் என்னை வேண்டும் என்றே சிக்க வைக்க முயற்சிக்கின்றனர். இறந்த மாணவிகள் நன்றாக படிக்கக்கூடியவர்கள். அவர்கள் இதுவரை கல்லூரிக்கு எதிராக எவ்வித போராட்டத்திலும் ஈடுபட்டது கிடையாது.”
“கல்லூரியை மூட வேண்டும் என கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக சிலர் செயல்பட்டு வந்தனர். எங்கள் கல்லூரியை மூடிக் காட்டுகிறேன் என காவல்துறை அதிகாரி ஒருவர் சபதமிட்டார். 3 மாணவிகள் கைகளை ஒன்றாகக் கட்டிக் கொண்டு, எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும்?”
“திட்டமிட்டு, 3 மாணவிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை, தற்கொலை என்ற கோணத்தில் எனக்கு எதிராக காவல்துறை திசை திருப்பி உள்ளது. இதில், தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். அரைமணி நேரம் ஒதுக்கினால் அனைத்து ஆதாரங்களையும் அளிக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறை விசாரணையில் தகவல்களை அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். காவல்துறை விசாரணையில் வாசுகி பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.