நியூயார்க் – இந்த ஆண்டிற்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 87.4 பில்லியன் டாலர்களுடன் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் பிரபல நட்பு ஊடகமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் எட்டாவது இடம் பிடித்துள்ளார். முகேஷ் அம்பானி உட்பட மூன்று இந்தியர்களும் இடம் பிடித்துள்ளனர்.
உலக செல்வந்தர்கள் குறித்த பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் வெல்த் எக்ஸ் நிறுவனம், இந்த ஆண்டிற்கான பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பில் கேட்சைத் தொடர்ந்து ஸ்பெயின் தொழில் அதிபர் அமென்சியோ ஆர்டிகா (66.8 பில்லியன் டாலர்கள்), அமெரிக்கத் தொழிலதிபர் வாரன் பப்ஃபெட் (60.7 பில்லியன் டாலர்கள்) மற்றொரு அமெரிக்கத் தொழில் அதிபர் ஜெஃப் பிசாஸ் (56.6 பில்லியன் டாலர்கள்) ஆகியோர் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கும் மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 42.1 பில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது. முகேஷ் அம்பானி, விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி, ‛சன் பார்மா’ நிறுவன இயக்குநர் திலீப் சங்வி என இந்தப் பட்டியலில் இடம் பிடித்து இருக்கும் மூன்று இந்தியர்களும் முறையே 27-வது, 43-வது மற்றும் 44-வது இடங்களைப் பிடித்துள்ளனர்.