சிரம்பான் மார்ச்.15- “கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. அவ்வகையில் கல்வியில் வெற்றியடைந்தவர்களே வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்குச் செல்ல இயலும். தரமான கல்வியும் வளமான பொருளாதாரமும் இன்றைய இந்திய இளைஞர்களின் மிக முக்கியமானத் தேவைகள் என்பதை நம் சமுதாயம் உணர்ந்து செயல்பட வேண்டும்” என்று துணையமைச்சரும் ம.இ.காவின் தேசிய உதவித் தலைவருமான டத்தோ சரவணன் கூறியுள்ளார்.
“வளர்ந்து வரும் இந்நவீன காலக்கட்டத்தில் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த சமுதாயமாகவும் சிந்தனை மாற்றம் கொண்டவர்களாகவும் நாம் செயல்பட்டால்தான் வாழ்க்கையில் வெற்றியடைய முடியும்” என்று நெகிரி மாநில மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் நினைவு நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய போது கூட்டரசு பிரதேச நல்வாழ்வு துணையமைச்சருமாகிய எம் சரவணன் இவ்வாறு உரையாற்றினார்.
தொடர்ந்து பேசிய அவர், நெகிரி மாநில மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் தனது சேவையை மிகச் சிறப்பாக ஆற்றி வருகிறது என்று புகழாரம் சூட்டினார். மேலும், மலேசிய இந்திய இளஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் முன்னேற்றவும் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் சிறப்பு வகிக்கிறது என மேலும் கூறினார்.
சிரம்பான் நகராண்மைக் கழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளைஞர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.
மேலும், மணிமன்ற தலைவர்களுடன் பல அரசியல் தலைவர்களும் பொது இயக்கங்களைச் சேந்தவர்களும் வருகை தந்திருந்தது நிகழ்வுக்கு மேலும் சிறப்பைச் சேர்த்தது. சேவையாளர்கள் பலருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு அவர்களுக்கு சிறப்பும் செய்யப்பட்டது.
மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் தேசியத் தலைவரும் நெகிரி மாநிலத் தலைவருமான கு.முரளி அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.