விருதுநகர், மார்ச்.15- வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களை மீட்க புதிய வேலைத் திட்டம் தேவை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி விருதுநகரில் மதிமுகவினர் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா துவக்கி வைத்தார். பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
வறட்சி பாதிப்பால் தமிழகத்தில் விவசாயிகள் ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை இழந்துள்ளனர். 13 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஏக்கருக்கு 25 ஆயிரம் இழப்பீடு என்பது, விவசாயிகள் எழுந்து நிற்பதற்குத்தான்.
டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டும் ஏக்கருக்கு 15 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. மானாவாரி விவசாயிகள் நலிந்த நிலையில் உள்ளனர். விவசாயிகளை மீட்க புதிய வேலை திட்டம் அறிவிக்க வேண்டும். இவ்வாறு வைகோ கூறினார்.